தலைமன்னார் – கொழும்பு புகையிரதச் சேவை இன்று ஆரம்பம்
கால் நூற்றாண்டுக்குப் பின்னர், இலங்கை தலைநகர் கொழும்புக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான நேரடி புகையிரதச் சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
தலைமன்னாருக்கான முதலாவது புகையிரதச் சேவை இன்று மாலை 7 .40 மணியளவில், புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
1990ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்ததையடுத்து, தலைமன்னாருக்கான புகையிரதச் சேவைகள் முற்றாகவே தடைப்பட்டிருந்தன. போர்க்காலத்தில், முற்றாகவே அழிந்து போன, மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான 106 கி.மீ நீளமான தொடருந்துப் பாதை இரண்டு கட்டங்களாக இந்தியாவின் இர்கோன் நிறுவனத்தினால் புனரமைக்கப்பட்டது.
இந்தியாவின் கடனுதவியின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட இந்த தொடருந்துப் பாதையில், கடந்த மாதம் 14ம் நாள், தலைமன்னாரில் வைத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து, புகையிரதச் சேவையை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்தப் பாதையில், கொழும்பு – தலைமன்னார் இடையில் இன்று தொடருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. தலைமன்னாருக்கான புகையிரதச் சேவை, தமிழ்நாட்டுக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.