இந்தியாவுக்கு இலங்கையர்கள் விசா இல்லாத பயண முறை அமலுக்கு வந்தது
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தினால் புதனன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த மாதம் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அமைவாக ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் உல்லாசப் பயணிகளான இலங்கையர்கள், மின்னியல் பிரயாண அனுமதியின் ஊடாக இந்தியாவுக்குச் சென்றதன் பின்னர் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயினும், இராஜதந்திர அலுவலக மட்டத்திலான கடவுச்சீட்டைக் கொண்டிருப்பவர்களும், பாகிஸ்தானிய வம்சாவளி இலங்கை பிரஜைகளும், இந்தியாவில் தொழில் செய்பவர்கள், அங்கு வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகள் ஆகியோர் இந்த இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தடவை மாத்திரமே பிரயாணம் செய்யக் கூடிய இந்த முறையின் மூலம் பெறுகின்ற விசா 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருக்கின்றது.
இந்தப் பிரயாண நடைமுறையின் மூலம் பெங்களுர், சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கொட்டா, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களின் ஊடாக மாத்திரமே இந்தியாவுக்குச் செல்லக் கூடியதாக இருக்கும். எனினும் இந்த நடைமுறையின் மூலம் விசா பெறுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு விமானத்தளத்தின் ஊடாகவும் அங்கிருந்து பிரயாணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் புதிய நடைமுறை இலங்கைப் பயணிகளுக்கு பல வழிகளில் நன்மை பயக்கத்தக்கதாக அமைந்துள்ளது என்று, கொழும்பில் உள்ள கிளாச்சிக் ட்ரவல்ஸ் என்ற பிரயாண முகவர் நிலையத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ரிம்ஸான் மொகமட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
பொதுவாக, இந்தியாவுக்கு உல்லாசப் பயணிகளாகச் செல்பவர்கள், தமது நிதி நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக, வங்கிக் கணக்கின் விபரங்களுக்குரிய ஆவணம் உள்ளிட்ட சில ஆவணங்களைத் தமது விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஆனால் அந்த நடைமுறை இந்தப் புதிய ஏற்பாட்டில் இல்லையென்று தெரிவித்தார். எனினும், இது சிங்கப்பூரில் உள்ள நடைமுறையைப் போலல்லாமல், மின்னியல் பிரயாண அனுமதியைப் பெற்றுச் செல்ல வேண்டியுள்ளது என்றும், சாதாரண மக்கள், பிரயாண முகவர்களை நாட வேண்டிய தேவை உள்ளது என்றும் ரிம்ஸான் மொகமட்தெரிவித்தார்.