Breaking News

ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் இன்று வடபகுதிக்கு விஜயம்!

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை வடக்கிற்கு செல்கின்றார்.

அவர் அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலருடன் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார். உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், 6 நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தடைந்த அவர் பலதரப்பட்டவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றார்.

இன்று புதன்கிழமை வடக்கிற்கு செல்லவுள்ள அவர், அங்கு வடக்கு மாகாணசபையினர் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.