தேர்தல் முறையில் திடீர் மாற்றம் ஏற்புடையதல்ல
தேர்தல் முறையை மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா சுதந்திர கட்சியை அடிப்படையாக கொண்டு செயற்பட தயாராகும் தினேஷ் குணவர்தனவின் குழு அறிக்கைக்கு எந்தவொரு கட்சியினதும் இணக்கப்பாடு இதுவரை கிடைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் சிறிலங்கா சுதந்திர கட்சி அண்மையில் 4 பேரைக் கொண்ட குழுவொன்றை ஸ்தாபித்தது.
அதன் உறுப்பினரான சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறி;ப்பிடுகையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் தேர்தல் முறையில் கொண்டுவரப்பட்ட திருத்ததை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக தினேஷ் குணவர்தனவின் குழு அறிக்கையை பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சி தலைவர்களின் சந்திப்பின் போது இதுபற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி. 20 வது திருத்தமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ள சட்டமூலத்தை தயாரிப்பதற்காக தினேஷ் குணவர்தனவின் குழு அறிக்கை பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரின் அறிவித்தலுக்கு மாற்றுக்கருத்தை வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா வெளியிட்டுள்ளார்.
திடீரென தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவரும் போது நுவரெலிய மாவட்டத்தில் அதிகபடியான பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம் என மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
புதிய தேர்தல் முறைமை தொடர்பாக பெருந்தோட்ட சமூகத்தினருக்கு விளக்கமளிக்கும் சம்மேளனத்தின் போதே அந்த முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரன்ஸ் இந்த கருத்தை வெளியிட்டார்.