Breaking News

சுயாதீன ஆணைக்குழுக்கள் வேண்டும்! சட்டத்தரணிகள் சங்கம்

இலங்கையில் 19ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கையின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முயற்சி எடுக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அரச சேவை, நீதிமன்றம், காவல்துறை, ஊழல் விசாரணை ஆகிய துறைகளுக்காக சுயாதின ஆணைக்குளுக்களை அமைப்பதற்கான சட்ட மூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான சட்ட மூலத்தை மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் இருந்தால் நிறைவேற்ற முடியும் என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செய்துமுடிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் சாலிய பீரிஸ் கொழும்பில் நடைபெற்ற தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும், இதனால் சுயாதீன குழுக்கள் தொடர்பாக வழக்கறிஞர்களும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கை பிளவுபடும் அபாயம் எழுந்துள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது மற்றும் தேர்தல் முறை சீர்திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பில் ஒருவருக்கொருவர் வாதாடிக்கொண்டிருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்துவிட்டு, ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்ப கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.