வீண்சுமையை ஏற்படுத்தியுள்ள மகிந்தவின் ஆடம்பரத் திட்டங்கள்!
இலங்கையில் இது தொடர்பாக முன்னர் கேள்வி யெழுப்பியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவர். ஏனெனில் மகிந்த ராஜபக்ச அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தார். இவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் இலங்கை விழித்துக் கொண்டுள்ளது.
இவ்வாறு, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் ஊடகத்தில் SHASHANK BENGALI எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கரையோரத்திலுள்ள, புதர்க்காடுகளையும், காட்டு மிருகங்கள் மற்றும் வேற்று நாட்டுப் பறவைகளின் சரணாலயத்தையும் கொண்ட பின்தங்கிய அம்பாந்தோட்டையை மிகப்பெரிய வர்த்தக மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதானது சாத்தியமற்ற ஒன்றாக நோக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டையைத் தனது சொந்த இடமாகக் கொண்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவின் கடன் திட்டங்களின் கீழ் இலங்கைத் தீவில் பல்வேறு பாரிய திட்டங்களை அமுல்படுத்தியிருந்தார். இருப்பினும் ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலின் மூலம் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார்.
இவர் தனது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் மிக அதிகளவில் முதலீட்டை மேற்கொண்டிருந்தார். இத்திட்டங்களுக்கு மகிந்த ராஜபக்ச தனது பெயரைப் பொறித்தார். இந்திய மாக்கடலின் கரையில் இலங்கைத் தீவின் தெற்குக் கரையோரத்தில் மகிந்த ராஜபக்சவால் மிகப் பாரியதொரு துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக இதுவரை ஒரு பில்லியன் டொலர் வரை செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமை பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 210 மில்லியன் டொலர் செலவில் அம்பாந்தோட்டையில் கட்டப்பட்ட அனைத்துலக விமான நிலையத்தில் நூறு வரையான பணியாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள போதிலும் இங்கு மிகச் சொற்பமான பயணிகளே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
35,000 ஆசனங்களைக் கொண்ட மகிந்த ராஜபக்ச அனைத்துலக துடுப்பாட்ட அரங்கம் மற்றும் புதிய மாநாட்டு மண்டபம் போன்றன மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. இதேபோன்று பல மைல்கள் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையிலும் அதிக போக்குவரத்துக்கள் இடம்பெறுவதில்லை.
‘இத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது என்பது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும். பின்தங்கிய அம்பாந்தோட்டையில் விமான நிலையம் மற்றும் வீதி போன்றன அமைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?’ என கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இலங்கையின் பிரதி அமைச்சர் ஹர்ச டீ சில்வா வினவுகிறார். இலங்கையில் இது தொடர்பாக முன்னர் கேள்வியெழுப்பியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவர். ஏனெனில் மகிந்த ராஜபக்ச அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தார்.
இவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், 20 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை தற்போது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் விழித்துக்கொண்டுள்ளது. மத்தள ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பறப்புக்களை மேற்கொள்வதை நிறுத்தப்போவதாக இலங்கை எயர்லைன்ஸ் அறிவித்திருந்தது. இவ்விமான நிலையத்தின் ஊடாக நாள்தோறும் இரண்டு தடவைகள் பறப்புக்களில் ஈடுபடுவதால் ஆண்டுதோறும் எட்டு மில்லியன் டொலர்களை இழப்பதாக இலங்கை எயர்லைன்ஸ் விமானசேவையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சவின் திட்டங்களை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார். 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் வென்றெடுக்கப்பட்ட பின்னர், 2009லிருந்து ராஜபக்ச ஆறு பில்லியன் டொலர்களை கட்டுமானத் திட்டங்களுக்காகச் செலவிட்டிருந்தார். இத்திட்டங்களுள் அம்பாந்தோட்டை துறைமுக மற்றும் விமான நிலையத் திட்டங்கள் உட்பட மூன்றில் இரண்டு திட்டங்கள் சீன வங்கிகளால் ஆண்டுதோறும் 6.3 சதவீத வட்டியில் கடனாக வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்டது.
திட்ட நிதிகள் ராஜபக்ச அரசாங்க உறுப்பினர்களால் மோசடி செய்யப்பட்டனவா என்பதைத் தற்போது அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர். இது தொடர்பில் இதுவரை எவ்வித குற்றங்களும் உறுதிசெய்யப்படவில்லை. இதேவேளையில், சீனக் கடன்களை மீளவும் ஒருங்கிணைப்பதற்கான வழிகளை நிதி அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதன்மூலம் இன்னமும் தொடங்கப்படாத திட்டங்கள் சிலவற்றை நிறுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக இலங்கையின் தலைநகர் கொழும்பில் 500 ஏக்கர் நிலத்தில் நகர அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான திட்டம் ராஜபக்சவால் கைச்சாத்திடப்பட்ட போதிலும் இது தற்போதைய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ராஜபக்சவைப் பொறுத்தளவில் இத்திட்டங்கள் போரால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி தென்னாசியாவில் மிகத் துரிதமான வளர்ச்சியை எட்டுவதற்கான வலுமிக்க குறியீடுகளாகக் காணப்பட்டன.
ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நிதி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை. ‘இலங்கை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பாகும். இதனால் இதனை அடைவதற்கான ஒரேயொரு ஊடகமாக சீனா காணப்பட்டது. அதாவது சீனா வளங்களைக் கொண்டிருந்ததுடன் எனக்கு உதவவேண்டும் என்கின்ற நல்ல மனப்பாங்கையும் கொண்டிருந்தது’ என இம்மாதம் சீன ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஒப்புதலை இந்திய மாக்கடலில் அதிகாரம் செலுத்துவதற்கான ஒரு தளமாக சீனா பயன்படுத்தியது. ‘இத்திட்டங்கள் ராஜபக்சவைப் பொறுத்தளவில் தற்பெருமையைப் பறைசாற்றுகின்றதாகக் காணப்பட்டது. ஆனால் ராஜபக்சவின் தற்பெருமையை மேலும் வளர்த்தெடுப்பதில் சீனா மகிழ்ச்சியடைந்தது’ என கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்று இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
பருவப்பெயர்ச்சியின் பின்னர் முளைக்கும் காளாண்கள் போன்று தமது மாவட்டத்தில் மிகப்பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட முன்னர் இவை தொடர்பாக தம்முடன் எவரும் கலந்தாலோசிக்கவில்லை என அம்பாந்தோட்டையிலுள்ள வர்த்தகத் தலைவர்கள் கூறுகின்றனர்.
2004ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது அம்பாந்தோட்டை பெருமளவில் அழிவடைந்தது. இந்த அழிவிலிருந்து இன்னமும் இது மீளவில்லை. விவசாயம் மற்றும் மீன்பிடியைப் பிரதான தொழிலாகக் கொண்ட அம்பாந்தோட்டையானது வரலாற்று ரீதியாக மிகவும் வறுமையான ஒரு இடமாகவே உள்ளது.
இங்குள்ள மக்கள் விமானப் பயணச் சீட்டுக்களை வாங்குவதிலும், மாநாட்டு மண்டபம் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதியைப் பயன்படுத்தக்கூடிய நிதிவளத்தைக் கொண்டிருக்கவில்லை. அம்பாந்தோட்டை வாழ் மக்கள் தன்னிறைவான பொருளாதாரத்தை எட்டுவதற்கு நீண்டகாலம் எடுக்கும்.
‘ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மூலம் உள்ளுர் மக்கள் தற்காலிகத் தொழில் வாய்ப்பையே பெற்றுள்ளனர். இது மக்களின் எதிர்பார்ப்பல்ல. இதன் மூலம் அம்பாந்தோட்டை மிகக் குறைந்தளவு பயனையே பெறுகிறது’ என அம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளனத் தலைவர் அஸ்மி தாசிம் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் விமான சேவையை பிறிதொரு வடிவத்திற்குள் கொண்டு செல்வதற்கான ஒரு முயற்சியாகவே தற்போது இவ்விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக மார்ச் 2013ல் மத்தள விமான நிலையத்தை ராஜபக்ச திறந்து வைத்தபோது அரச ஊடகம் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறெனினும் 2014 நடுப்பகுதியில் இவ்விமான நிலையத்தின் நிதி நிலைமை ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது போன்று மோசமாகியது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இது தொடர்பில் தமது எதிர்ப்பை முன்வைத்தனர். ஒரு மாதத்தில் இதன் மொத்த வருமானம் 16,000 இலங்கை ரூபா மட்டுமே என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான சேவையை, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுத்திய பின்னர், பிளைடுபாய் விமானம் மட்டுமே சேவையில் ஈடுபடுகிறது.
இவ்விமானம் நாள்தோறும் கொழும்பின் ஊடாக இவ்விமான நிலையத்தை அடையும். இதில் சில ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே பயணம் செய்வர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இது மீண்டும் டுபாய்க்குப் புறப்படும். எஞ்சிய நேரத்தில் செலவுகளைக் குறைப்பதற்காக குளிரூட்டிகளும் விளக்குகளும், அனைத்து வைக்கப்படுகின்றன. நவீன வசதிகளைக் கொண்ட பயணிகள் முனையத்தில், 500 வரையான பணியாளர்கள் இன்னமும் வேலை செய்கின்றனர்.
நேற்று 25 பயணிகள் வந்தனர் என்று பிரகாசமான முகத்துடன் ஒருவர் கூறினார். வழக்கமாக நாளொன்றுக்கு 5 அல்லது 10 பேர் தான் வருவர் என்றும் அவர் கூறினார்.
‘இது விமான நிலையம் அமைப்பதற்கான சிறந்த இடமல்ல’ என சுயாதீன சூழலியல் குழுவான முகாமைத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான தலைவர் பிருதிவிராஜ் பெர்னாண்டோ கூறினார். அம்பாந்தோட்டை பட்டினத்திற்கு அடுத்ததாக உள்ள 4000 ஏக்கரில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ள பாறைப்படுக்கையைக் கொண்ட மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகம் தொடர்பாக அதிகாரிகள் சாதகமான கருத்துக்களைக் கூறினர்.
கொழும்பிற்கு சமீபமாக பிறிதொரு துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான வழிவகையை இலங்கை நீண்டகாலமாக ஆராய்ந்தது. தென்கிழக்காசியாவை ஆபிரிக்காவுடனும் மத்திய கிழக்குடனும் தொடர்புபடுத்துவதற்கான கடல் வழிகளுக்கு அருகில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளமை சிறிலங்காவுக்கான ஒரு நல்வாய்ப்பாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஆனால் அம்பாந்தோட்டைத் துறைமுகமானது கடல் உயிரினங்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்திய மாக்கடலிலுள்ள சிறந்த இயற்கையான ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றான, இலங்கைத் தீவின் கிழக்குப் புறத்தே அமைந்துள்ள திருகோணமலையில் இவ்வாறான ஒரு பாறைப்படுக்கையை உருவாக்கியிருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
துறைமுகங்கள் மற்றும் மீன்பிடித்துறையின் அமைச்சராக 2000ல் ராஜபக்ச பணியாற்றிய போது, அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைப்பதால் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பான முழுமையான அறிக்கை ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டதாக ‘சண்டேலீடர்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஆனால் இந்தச் சவால்கள் தொடர்பாக ராஜபக்ச கருத்திலெடுக்கவில்லை. மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக எவ்வித தடைகளுமின்றி நீண்டகாலமாக ஆட்சி செய்திருந்தால் அம்பாந்தோட்டையை நாட்டின் தலைநகராக அறிவித்திருப்பார் என சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.