சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிடின் பூச்சிய நிலையடைந்து விடுவோம் - சம்பந்தன்
சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் பூச்சிய நிலையை அடைந்துவிடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் சர்வதேச சமூகத்துக்கு முன்னால் கொண்டு செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.நா.சபையின் மனித உரிமை குழுவுக்கு முன் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கம் தான் ஐ.நா. சபையினுடனும் மனித உரிமை பேரவையுடனும் ஒத்துழைக்கத் தயார் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விசாரணை வெளியிடப்படுவது செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும், மீண்டும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அரசாங்கத்திடம் கூறியுள்ளோம். அதற்காக சில திட்டங்களை வகுத்து அதன்படி செயற்பட அரசாங்கம் தயாராகி வருகின்ற நிலையில் சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.