ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுத்தமை தவறு என்கிறார் டக்ளஸ்
யாழ். குடாநாட்டு நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில் கடந்த 12ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தவறான ஓர் அணுகுமுறையாகும். என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது மக்களில் சுமார் 13 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 45 ஆயிரத்து 764 பேரைப் பாதிப்புக்கு உட்படுத்தியுள்ள ஒரு முக்கிய விடயம் தொடர்பில் அந்த மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தக்கூடிய பெரும் சமூகப் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. ஒரு கலந்துரையாடலின் பின்னர், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் கேட்டறிந்துகொள்வதை விட, அக்கலந்துரையாடலில் முன்வைக்கப்படுகின்ற பல்வேறு கருத்துக்களையும், வாத, விவாதங்களையும் நேரில் கேட்டறிந்து, அவற்றினையும் உள்ளடக்கியதாக தங்கள் நோக்குகளில் செய்திகளை எழுதி வெளிவரச் செய்வதே அந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை மேலும் வலுப்பெறச் செய்வதாக அமையும்.
கடந்த காலங்களில் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அபிவிருத்திக் குழுக்களின் கூட்டங்களில் கூட ஊடகவியலாளர்களை கலந்துகொள்ள விடக்கூடாது என ஒருசாரார் கூறியும், நான் அதனை மறுத்து, ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளச் செய்திருந்தேன்.
நிலத்தடி நீர் மாசு தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்ட தங்களது சுயரூபங்கள் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளதால், தங்களது பொய்களை மூடி மறைக்க முயலும் சக்திகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. இவர்களைப் பற்றி புகழ்ந்து எழுதினால் ஊடகவியலாளர்கள் நல்லவர்கள். இவர்களது பொய்களை அம்பலப்படுத்தினால் ஊடகவியலாளர்கள் குழப்பகாரர்கள் என ஒதுக்குகின்றனர் என தெரிவித்துள்ளார்.