இலங்கையின் விசாரணைக் குழுவில் நம்பிக்கையில்லை – ஐ.நா
இலங்கையின் விசாரணைக் குழுக்கள் தொடர்பில் நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் இலங்கையின் ஆணைக்குழுக்கள் காலத்தை கடத்தும் ஓர் கருவியாகவே செயற்பட்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பெப்லே டி கிரிப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க காலம் எடுத்துக் கொள்ளும் முனைப்பாகவே அநேகமான விசாரணைக் குழுக்களை அடையாளப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தன்மைக்கு இவ்வாறான விசாரணைக் குழுக்கள் தொடர்பிலான நம்பிக்கையற்ற தன்மை பாதக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிறுவப்பட்ட பல ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளன அல்லது அந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் இலங்கையில் பல்வேறு விசாரணை ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரவித்துள்ளார்.
சில ஆணைக்குழுக்கள் மிகவும் பயனுள்ள பரிந்துரைகளுடன் அறிக்கை வெளியிட்டதாகவும், சிலவற்றின் விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுக்கள் இன சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் இடைவெளியை நீக்க வழியமைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால தவறுகளை தொடர்ந்தும் செய்வதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க நம்பகமான பொறிமுறைமை உருவாக்கப்பட்டு அனைவரினதும் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் நாட்டில் நல்லிணக்க முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறுக்கு வழிகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் நிலையான நல்லிணக்கத்தை நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் ஏற்படுத்த முடியும் எனவும் பெப்லே டி கிரிப்த் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தின் நிறைவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.