பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் மகிந்த!
நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியேனும் பிரதமர் பதவியை பறிக்க வேண்டும் என்னும் கனவோடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடுமையாக ஆசைப்படுவதாக ஹம்பாந்தோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று அறிந்து வைத்துள்ள மகிந்தர் அதன் போது தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தன் மறு அரசியல் பிரவேசத்திற்கு தனக்கு ஆதரவானவர்களை திரட்டி வருவதாகவும்,அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்துபசாரங்கள் செய்து வருவதும் அறிந்ததே.
மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரவேசம் பற்றியதான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றார். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் பிரதமராகி அடுத்து இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர் எப்படியேனும் மறுபடியும் தான் ஜனாதிபதியாக அவதாரம் எடுக்காவிட்டாலும் நாட்டின் பிரதமராக வேண்டும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு தடவை பிரதமராகவும், இரண்டு தடவை ஜனாதிபதியாகவும் இருந்து விட்டு இப்போது வீட்டில் இருக்கும் நான் அரசியல் பிரவேசம் எடுத்தால் பிரதமர் பதவியிலேயே அமரவேண்டும். அல்லாது சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் அது தனக்கு அவமானம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகையால் என்ன விலை கொடுத்தேனும் தன்னுடைய அடுத்த இலக்கை அடைய மகிந்த ராஜபக்ச கடும் தவம் இருக்கிறார்.இதற்கு அமைச்சர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தூதுக்கள் அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் கசிக்கின்றன.தேசிய அரசாங்கத்தோடு இணைந்திருப்பவர்களையும் பிரித்தெடுத்து புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிறுத்தப்படக்கூடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்களில் இருந்து அதிகமாக பேச்சுக்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
இது இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்தவும்,சந்திரிக்காவும் பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் தன்னுடைய அரசியல் கனவு சிதைந்து போகக்கூடும் என தற்போதைய பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கவலை கொண்டுள்ளார்.
இதனால் யாரை எப்படி பிரித்து வைத்து தன் கனவை நிறைவேற்ற தந்திரம் தீட்டிக்கொண்டிருப்பதாகவும் இன்னொரு தகவல்கள் கசிந்துள்ளன.அதன் ஒரு தந்திரமே வடக்கு முதல்வரோடு தான் மகிந்தர் போன்று விடாப்பிடியாக இருப்பதாக காட்டிக்கொண்டு நாடகமாடுகின்றார் .
எது எவ்வாறெனினும் அடுத்த சில வாரங்களில் கொழும்பு அரசியலில் ஒரு கடும் சூறாவழி ஏற்படப்போவதை தற்போதைய அரசியல் களம் உணர்த்தி நிற்கின்றன. இதில் தமிழர் அரசியல் தரப்பு என்ன செய்யப்போகின்றன. அவர்களின் அரசியல் ஆடுகளம் எவ்வாறு அமையும் என்பதை பெரும்பான்மை கட்சிகளின் திருகுதாளங்களைப் பொறுத்தே அமையும்.தொடர்ந்து வரும் அரசியல் களங்களை தமிழ்வின் உங்களுக்காக உடனுக்குடன் வெளியிட்டுக் கொண்டே இருக்கும்.