சென்னையில் தூதரகம் அமைக்க சீனா ஆர்வம்!
தமிழ்நாட்டுடனான வர்த்தக, கலாசார உறவுகளை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய, இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லீ யூசெங், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மாநிலத் தலைவர்களுக்கும், சீனாவின் மாகாணத் தலைவர்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் சீனத் தூதரகம் அக்கறை கொண்டுள்ளதாகவும், சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 100 சீன நிறுவனங்கள் இயங்குவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில், 6 சீன நிறுவனங்கள் மட்டுமே செயற்படுவதாகவும் குறிப்பிட்ட சீனத் தூதுவர், இலத்திரனியல் வன்பொருட்கள். ஆடை, கனரக பொறியியல் துறை, வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில், தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையில், ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.