நச்சுப் பாம்பை கொண்டுவர முயன்றவர்களுக்கு சாரை பாம்பையே கொண்டுவர முடிந்தது!
நச்சுப் பாம்பு போன்ற 19வது திருத்தத்தை பாராளுமன்றிற்கு கொண்டுவர நினைத்த போதும் இறுதியில் நிறைவேற்றப்பட்டது சாரைப் பாம்பு போன்ற 19வது திருத்தம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி வசம் உள்ள அதிகாரங்களை பிரதமர் வசமாக்கிக் கொள்ள எடுத்த முயற்சி தோல்வியுற்றுள்ளதாக விமல் தெரிவித்தார்.
19வது திருத்தம் பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட போது எதிர்கட்சித் தலைவரின் பணியை செய்தது தினேஸ் குணவர்த்தன என அவர் குறிப்பிட்டார். யாப்புச் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றி தமக்கு ஏற்றவர்களை நியமிக்க எடுத்த முயற்சியை தோல்வியடையச் செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிந்தது என்று சோபித்த தேரர் தற்போது நினைக்கக் கூடும் என்றும் திட்டம் தவறியதால் பிரதமர் கவலையில் இருக்கக் கூடும் என்றும் விமல் குறிப்பிட்டார்.