"மக்கள் ஆதரவு மஹிந்தவுக்கே" - கெஹெலிய நம்பிக்கை
தேர்தல் ஒன்றில் தோல்வியடைந்தவர் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது என்று உலகில் எங்கும் சட்டம் இல்லை. எனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவை அனைவரும் கருத்திற்கொள்ளவேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்த தடையும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அது சிறந்த விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவை அம்பாந்தோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் 37 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
மஹிந்த ராஜபக்ஷவுடன் பாரிய அரசியல் சக்தி ஒன்று திரண்டுள்ளது என்ற விடயத்தை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ளவேண்டும். அந்தவகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்த தடையும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அது சிறந்த விடயமாகும். மஹிந்த ராஜபக்ஷவுடன் பாரிய அரசியல் சக்தி உள்ளது என்பதனை புரிந்துகொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதுகின்றோம்.
நான் கண்டியில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் பகலுணவு ஒன்றுகூடல் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்த தடையும் இல்லை என்று கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தாலும் அவருக்கான மக்கள் ஆதரவு அவ்வாறே உள்ளது. தேர்தல் ஒன்றில் தோல்வியடைந்தவர் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது என்று உலகில் எங்கும் சட்டம் இல்லை. எனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவை அனைவரும் கருத்திற்கொள்ளவேண்டும். அப்படியானால் 29 தடவைகள் தோல்வியடைந்த ஒருவர் தற்போது உயர்பதவியில் இருக்கின்றாரே? அதற்கு என்ன சொல்லப் போகின்றார்கள்?
இதேவேளை தற்போதைக்கு நாட்டில் தேசிய அரசாங்கம் அவசியமில்லை. தேசிய அரசாங்கம் யுத்த காலத்தில் தேவையாக இருந்தது. சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டபோது தேசிய அரசாங்கம் தேவையாக இருந்தது. ஆனால் தற்போது தேசிய அரசாங்கத்துக்கான அவசியம் இல்லை. ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் தொடர்ந்து அமர்த்துவதற்கே தற்போதைய தேசிய அரசாங்கம் உதவியாகவுள்ளது என்றார்.