Breaking News

தமிழிலேயே பாடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறிய ராஜித

வடக்கு, கிழக்கில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை தமிழிலேயே பாடுங்கள் என்று சிறிலங்காவின் சிங்கள அமைச்சர் ஒருவரே தமிழர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவே இந்த அறிவுரையைக் கூறியிருக்கிறார்.கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவுத் தொகுதியை சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சிறிலங்காவின் தேசிய கீதம், சிங்கள மொழியிலேயே பாடப்பட்டது. இதுகுறித்து தனது உரையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, “நீங்கள் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடியிருந்தீர்கள். ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு அது விளங்கியிருக்கின்றது என்று எனக்கு தெரியாது.

அதன் காரணமாக அடுத்த முறை இந்த மருத்துவமனைக்கு வரும் போது தேசியகீதத்தை தமிழில் பாடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.” என்று அவர் குறிப்பிட்டார். உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை வளலாயில் ஒப்படைக்கும் நிகழ்வு அண்மையில் சிறிலங்கா அதிபர் தலைமையில் நடந்த போது, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் சிறிலங்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தமிழ்ப் பகுதிகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்க எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.