ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் – புத்தாண்டுச் செய்தியில் பிரித்தானிய பிரதமர்
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற அட்டூழியங்கள் குறித்த ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று கொண்டாடப்படும், தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“பிரித்தானியாவிலும், இலங்கையிலும், உலகின் ஏனைய நாடுகளிலும் இன்று புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மில்லியன் கணக்கான மக்கள் இன்று தமது குடும்பத்தினர், நண்பர்கள், அயலவர்களுடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.
பிரித்தானியாவில் தமிழ், சிங்கள சமூகங்களின் அற்புதமான பங்களிப்புகளையும் இந்த தருணத்தில் நினைவு கூர வேண்டும். இன்று பலர், வெளிநாடுகளில் உள்ள தமது அன்புக்குரியவர்களை நினைத்து, குறிப்பாக சிறிலங்காவில் உள்ளவர்களை நினைத்து புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.
கடந்தமாதம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை டவுணிங் வீதி இல்லத்தில் சந்தித்த போது, கடந்த கால விவகாரங்களுக்குத் தீர்வு காண அவரது அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு எனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளேன்.
ஆனால்,இலங்கை அரசாங்கம் ஐ.நா விசாரணைகளுக்கு முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும், இன்னும் மேலே செல்ல வேண்டும் என்றும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன். இந்த புத்தாண்டு கடந்தகால காயங்களை குணப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகங்களுக்கு இடையில் நெருக்கத்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன். புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான, வளம்மிக்க ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.