சகாப்தம் – திரை விமர்சனம் (காணொளி இணைப்பு)
கிராமத்தில் தாயை இழந்து தந்தையோடு வாழ்ந்து வரும் சண்முகபாண்டியன், கிராமத்தில் விவசாயம் ஏதும் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பன் ஜெகனோடு ஊர் சுற்றி வருகிறார்.
இவர் தனது மாமன் மகளான நேகாவை காதலித்தும் வருகிறார். இந்த நிலையில், மலேசியாவில் இருந்து ஊருக்கு திரும்பும் இவரது நண்பரான பவர் ஸ்டார், மலேசியாவில் பெரிய கம்பெனியில் தான் வேலை பார்ப்பதாகவும், நல்ல சம்பளம் வாங்குகிறேன் என்று இவர்களிடம் சொல்லி பிலிம் காட்டுகிறார்.
இதையெல்லாம் உண்மை என்று நம்பிய சண்முகபாண்டியனும், ஜெகனும் மலேசியா செல்ல முடிவெடுக்கிறார்கள். இதே ஊரில் வசிக்கும் தேவயானி, மலேசியாவுக்கு சென்ற தனது கணவர் ரஞ்சித் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார். ரஞ்சித் வெளிநாடு செல்வதற்காக கந்துவட்டிக்காரரிடம் வாங்கிய பணத்தை கட்ட முடியாமல் தவிக்கும் தேவயானியிடம் கந்து வட்டிக்காரன் தவறாக நடக்க முயற்சிக்கிறார். அவனிடமிருந்து சண்முகபாண்டியன் தேவயானியை காப்பாறுகிறார்.
இதனால் சண்முகபாண்டியன் மீது தனி பாசம் காட்டும் தேவயானி, அவன் மலேசியாவுக்கு செல்லவிருப்பதை அறிந்ததும், அவனிடம் தனது கணவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து தரும்படியும் கேட்கிறார். இந்நிலையில், ஒருநாள் சண்முகபாண்டியனும், ஜெகனும் மலேசியாவுக்கு பயணப்படுகிறார்கள். மலேசியாவில் சென்று இறங்கும் இவர்களை வரவேற்க யாரும் வரவில்லை.
திக்குத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் இவர்களை விமான நிலைய அதிகாரியான தலைவாசல் விஜய் கவனித்து, இவர்கள் தமிழர்கள் என்றதும் இவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறார். அதன்படி, இவர்கள் பவர் ஸ்டாரின் முகவரியை அவரிடம் கூற, தலைவாசல் விஜய் இருவரையும் அங்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு பவர் ஸ்டாரை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியாகிறார்கள். ஏனென்றால், பெரிய கம்பெனியில் வேலை செய்வதாக கூறிய பவர் ஸ்டார், இங்கு ஒரு புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிவதை பார்த்ததும் அவர் மீது கோபமடைகிறார்கள்.
தன்னை நம்பி அவர்கள் வந்துள்ளதால் தன்னுடைய நண்பரான சிங்கம் புலியிடம் வேலைக்கு அனுப்பி வைக்கிறார் பவர் ஸ்டார். ஆனால், அந்த வேலையில் இருவருக்கும் ஈடுபாடு இல்லை.
இதற்கிடையில் மலேசியாவில் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் சுப்ரா ஒரு பிரச்சினையில் மாட்டி விடுகிறார். இதிலிருந்து தப்பிக்க சண்முகபாண்டியன் அவருக்கு உதவுகிறார். இதனால், சண்முகபாண்டியன் மீது ஒருவிதமான பாசம் அவருக்குள் ஏற்படுகிறது. பிறகு சண்முக பாண்டியனை தனது துப்பறியும் நிறுவனத்திலேயே பணியமர்த்துகிறார் சுப்ரா. துப்பறியும் நிறுவனத்தின் மூலம் அங்குள்ள மலேசியா போலீசாரிடம் மிகவும் நட்பாக பழகி வருகிறார் சணுமுக பாண்டியன்.
ஒருமுறை துப்பறியும் நிறுவனம் மூலம் தனது நண்பர்களை வெளியே கொண்டுவர ஜெயிலுக்கு செல்லும் சண்முகபாண்டியன் அங்கு ரஞ்சித்தை பார்க்கிறார். அவர் எப்படி ஜெயிலுக்கு வந்தார் என்பது குறித்து அவரிடம் கேட்கும்போது, மருந்து பொருட்களில் கலப்படம் செய்யும் கம்பெனி ஒன்று தன்னையும், தன்னுடன் வேலை செய்பவர்களையும் அடிமையாக வைத்து கொடுமைப்படுத்தியதையும், தான் அங்கிருந்து தப்பி வந்ததையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார்.
மேலும், தன்னிடம் மலேசியாவில் இருப்பதற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸ் சிறையில் தள்ளியதையும் கூறுகிறார். பின்னர், அவருடன் இணைந்து மருந்து கலப்படம் செய்யும் கும்பலை போலீசிடம் சண்முக பாண்டியன் மாட்டிவிட்டாரா? அடிமைகளை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.
சகாப்தம் திரைப்படம் தொடர்பான விமர்சனத்தை காணொளி வடிவில் கேட்கலாம்.