நான்கு இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கியூ பிரிவினால் கைது
போலி இந்தியக் கடவுச்சீட்டு மற்றும், நுழைவிசைவுகளைத் தயாரித்து, இலங்கைத் தமிழ் அகதிகளை நேபாளம் வழியாக ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு அனுப்பி வந்த இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர், கியூ பிரிவு காவல்துறையினரால் சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான பாலன் எனப்படும் ஆர்.பாலச்சந்திரன்( 48 வயது) , மற்றும் அதியமான் எனப்படும் பி.லிங்கரன் (40 வயது), முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களான ஜி.ஜெயதாசன் (43 வயது), ஜி.தனுசன் (22 வயது) ஆகிய நால்வருமே, கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலச்சந்திரன் அம்பத்தூரில் வைத்தும், ஏனைய மூவரும், மதுரவாயலில் வைத்தும், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 10 போலிக் கடவுச்சீட்டுகளும், ஒன்றரை இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி கடவுச்சீட்டு மற்றும் நுழைவிசைவைப் பயன்படுத்தி, நேபாளம் அல்லது பங்களாதேஸ் வழியாக, இலங்கை அகதிகளை இவர்கள், பிரான்ஸ் மற்றும் கனடாவுக்கு அனுப்பி வந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள், இலங்கை அகதிகளிடம் பெருமளவு பணத்தையும் அறவிட்டு வந்துள்ளதாகவும், இந்தக் குழுவைச் சேர்ந்த மேலும் பலரைத் தேடி வருவதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பாலன் தலைமையில் இயங்கிய இந்தக் குழுவினர் ஏற்கனவே, சுமார் 50 பேரை சட்டவிரோதமாக பிரான்ஸ் மற்றும் கனடாவுக்கு அனுப்பியிருப்பதாகவும், மேலும் 15 பேர் கொண்ட குழுவினரை அனுப்பிவைக்கத் தயாரான நிலையிலேயே பிடிபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.