முல்லைத்தீவு கடலில் தொடரும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாவட்டத்திலுள்ள தமிழ் மீனவர்கள் மிகப்பெரும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மாவட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்
2012ம் ஆண்டு மேற்படி நாயாறு கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்காக முதலில் 52 தென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்றொழில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2013ம் ஆண்டு அதேபகுதியில் மேலும் 20 தென்னிலங்கை மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மொத்தமாக 72 மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்ட மீனவர்களுக்கு மேலதிகமாக சுமார் 300ற்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் இப்பகுதியில் கடற்றொழில் செய்து வருவதுடன், சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை கையாண்டு தொழில் செய்கின்றனர். இதன்காரணமாக முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்கள் மிகப்பெரும் வாழ்வாதார நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோதமான தொழிலிலில் ஈடுபட்டுவரும் தென்னிலங்கை மீனவர்களை மாவட்டக் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிலையில் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கடற்றொழிலில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார்.
நாயாறு கடற்பகுதியில் சட்டவிரோதமான தொழில் செய்துவரும் தென்னிலங்கை மீனவர்களை கைதுசெய்ய வேண்டாம். என அவர் கூறியுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். என மீனவர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
வடமாகாணசபையின் 27வது அமர்வில் மேற்படி விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால் 1980ம், 1983ம் ஆண்டுகளில் குறித்த தென்னிலங்கை மீனவர்களில் சிலர் அந்தப் பகுதியில் தொழில் செய்திருக்கின்றார்கள்.
மேலும் அந்த மீனவர்களுக்கு அனுமதி கொடுத்தவர்களும் எங்களுடைய மீனவர்களே. எனவே இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்படவேண்டும். இது இனரீதியான பிரச்சினையாக மாறக்கூடும். மேற்படி விடயம் தொடர்பாக நாம் அவதானமாக செயற்படவேண்டும். எனவே சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக எனக்கு எங்கள் கடற்றொழிலாளர்கள் எழுத்துமூல முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரச்சினை மட்டுமல்லாமல் வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் முழுமையான நடவடிக்கைகளுக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். நிச்சயமான மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.