கூட்டமைப்பின் இராஜதந்திரத்தால் கிடைத்த வெற்றி என்ன? கேள்வி எழுப்பும் கஜேந்திரகுமார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர செயற்பாடுகளால் கடந்த 5 வருடங்களில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றி என்ன என்பதை அவர்கள், மக்களிடம் கூறவேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இனவாதம் பேசுவதனூடாக தீர்வுகளை எட்ட முடியாது. இதனால் எதையும் சாதிக்க முடியாது. இரு நாடு ஒரு தேசம் என்று சிலர் கோஷம் எழுப்புகின்றனர் என்று கூறியிருந்தார்' என்பதை நினைவுபடுத்தினார்.
'தமிழ் மக்களின் எதிர்காலத்துக்காக இந்தக் கருத்தின் விளக்கத்தை சம்பந்தன் கூறவேண்டும். தேசியம் தொடர்பில் புதிதாக சொல்லப்படும் கோஷம் அல்ல இது. தமிழ்த் தேசம் என்ற நிலைப்பாடு அனைத்து தமிழ் பிரதிநிதித்துவ கட்சிகளாலும் ஆரம்பத்தில் இருந்து கூறப்படுகின்ற விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாம் பிரிந்த பின் எழுகின்ற கோஷம் இல்லை. இதனை கைவிட்டு தமிழ் தேசியத்தை கொண்டு செல்ல முடியாது என சம்பந்தன் பேசுவதை நோக்கும் போது, தமிழ்த் தேசியத்தை கைவிட்டு கூட்டமைப்பின் தலைமை செயற்படுகின்றது என்று அர்த்தப்படுகின்றது' என்றார்.
'தேசம் என்பதை கைவிட்டால் நாட்டில் நாம் சிறுபான்மையினத்தவராகிவிடுவோம். சம்பந்தனின் அனைத்து நடவடிக்கைகளையும் தொகுத்துப் பார்த்தால் தெரியும் அவரது நிலைப்பாடு என்ன என்பது. இரு நாடு ஒரு தேசம் என்பதை கைவிட்டு, சிறுபான்மை இனமாக செயற்பட கூட்டமைப்பு முடிவெடுத்துவிட்டது என்பது சம்பந்தனின் பேச்சில் வெளிப்படுகின்றது. தேசியத்தை கைவிட்டு மக்களை ஏமாற்றும் கோஷங்களை கூட்டமைப்பு எழுப்புகின்றது.
புதிய அரசின் ஆட்சி மீது நம்பிக்கை உள்ளது. நல்லது நடக்கும் நம்புங்கள் என்று கூறுகின்றனர். நாம் கடந்த 65 வருடங்களாக நம்பிக்கை வைத்து ஏமாந்தது போதும். இனியும் நாம் வீண் இழப்புக்களுக்கு இடமளிக்கக்கூடாது. மக்களை நம்புங்கள் என்று தவறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். எனவே, மக்கள் இனியும் ஏமாறாமல் விழிப்பாக இருக்க வேண்டும்' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் வலியுறுத்தினார்.