பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் சோமவன்ச அமரசிங்க
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். மக்களுக்கு விசுவாசமுள்ள அரசாங்கமொன்றை அமைக்கத் தாம் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் மேடைகளில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் பிரகாரம் அவரிடம் வினவியதை அடுத்து, நியூஸ்பெஸ்டுக்கு கருத்து தெரிவித்தபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தார்மீகப் பொறுப்புடைய அரசாங்கத்தை உருவாக்குவதே தமது இலக்காகும் என்றும் அவர் கூறினார். தம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் தலைமைத்துவம் குறித்து எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்மேளனக் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கவுள்ளதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டார்.
ஆயினும், நாட்டிலுள்ள பிரதான கட்சிகளுக்கு எந்த வகையிலும் தம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள கட்சி ஆதரவு தெரிவிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமையின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியுடன் மோதலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.