உக்ரேன் செல்கிறது இலங்கையின் உயர்மட்ட விசாரணைக்குழு
ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான, உதயங்க வீரதுங்க தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்க மற்றும் காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று உக்ரேனுக்குச் செல்லவுள்ளது.
உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு உதயங்க வீரதுங்க ஆயுதங்களை விநியோகித்தார் என்று உக்ரேனிய அரசாங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பான மேலதிக விபரங்களைத் திரட்டிக் கொள்ளும் நோக்கிலேயே, இந்த உயர் மட்டக் குழு உக்ரேனுக்குப் பயணமாகவுள்ளது.
இதுதொடர்பான விவகாரங்கள் குறித்து, இந்தியாவுக்கான உக்ரேனியத் தூதுவர், ஒலெக்சான்டர் சிவ்சென்கோவுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை கலந்துரையாடவுள்ளார்.
ஒலெக்சான்டர் சிவ்சென்கோ புதுடெல்லியில் இருந்தவாறு, இலங்கைக்கான தூதுவராகவும் செயற்பட்டு வருகிறார். உக்ரேனியத் தூதுவரை, கொழும்புக்கு வருமாறு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உயர்மட்ட விசாரணைக் குழு உக்ரேனுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு உக்ரேனிய அரசாங்கம் உதவிகளை வழங்குமாறு, அவரிடம், மங்கள சமரவீர கோரிக்கை விடுக்கவுள்ளதாக, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உக்ரேனியத் தலைநகர் கீவ் இற்கு செல்லவுள்ள இலங்கையின் விசாரணையாளர்கள், மகிந்த ராஜபக்சவினால் ரஸ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்தே அங்கு, இலங்கை உணவகம் ஒன்றை நடத்தி வந்த உதயங்க வீரதுங்க, எவ்வாறு ஆயுதங்களைப் பெற்றார் என்று அறிந்து கொள்ளவுள்ளனர்.
அதேவேளை, இந்த விசாரணைக்குழு மேலும் இரண்டு விடயங்கள் குறித்தும் விசாரிக்கவுள்ளது. முதலாவது, இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை வாங்கியது தொடர்பான விடயம். இந்த விமானங்களை வாங்குவதற்கான தரகராக, உதயங்க வீரதுங்கவே செயற்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய இந்த பேரம் தொடர்பாக, தற்போது நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது நோக்கம், இலங்கை தூதுவராக இருந்த உதயங்கவின் தனிப்பட்ட செயலராக இருந்த நொயல் ரணவீர என்பவரின் மரணம் தொடர்பாக விசாரிப்பதாகும். இவர் மொஸ்கோவில் இடம்பெற்ற விபத்தில் மரணமானதாக கூறி, சடலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.