மஹிந்தவை மடக்க காய்நகர்த்தல்களை ஆரம்பித்தார் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலில் களமிறங்க உள்ளமை தொடர்பான சமிக்ஞைகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான காய்நகர்த்தல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய ஜனாதிபதி இடமளித்து வருகின்றார் என்ற விமர்சனங்கள் கிளம்பத் தொடங்கியுள்ள நிலையிலேயே, மைத்திரி தனது காய்நகர்த்தல்களின் வீச்சை அதிகரித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. அதன் ஆரம்ப நடவடிக்கையே கடந்த சனிக்கிழமை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஐவர் நீக்கப்பட்டமை என்று கூறப்படுகின்றது.
கட்சியில் இருந்து கட்சித் தலைமைக்கு எதிராகச் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் ஐவரும் நீக்கப்பட்டிருந்தனர். அடுத்து வரும் நாள்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமானதாக் கருதப்படும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல், தகவல் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தேர்தல் சீர் திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் போன்றவை தொடர்பில் விவாதங்களும் நடைபெறவுள்ளன.
அத்துடன் அவர் நூறு நாள்கள் நிறைவில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பிலும் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதி தனது காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளார். தாம் எந்த முடிவையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை என்பதை அவர் சாடைமாடையாகத் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை வெளிக்காட்டாது அமைதியாக இருந்தமையால் அக்கட்சி உறுப்பினர்கள் தலை கால் புரியாமல் பல கருத்துகளைப் பட்டும் படாமலும் வெளியிட்டு ஜனாதிபதியைத் தாக்கி வந்தனர்.
இந்நிலையில், தனது அதிகாரத்தையும் தீர்மானமெடுக்கும் திரணையும் வெளிப்படுத்திய அதேவேளை கட்சிக்குள் இருந்துகொண்ட தலைமைத்துவத்திற்கு எதிராக குழிபறிப்பவர்களுக்கு எதிராக சகித்துக்கொள்ளப்போவதில்லை என்பதை காண்பிப்பதற்கான செய்தியாகவே மத்திய குழுவிலிருந்து ஐவரையும் பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரியவருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றியையடுத்து அடுத்து முன்னாள் ஜனாதிபதியிடமிருந்த கட்சித் தலைமைப் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் வந்தது. இதனால் கட்சிக்குள் மஹிந்தவுக்கு இருந்த மவுசு குறைய ஆரம்பித்தது. அதன் பின்னர் அவர் கட்சி உயர்மட்டக் கூட்டங்கள் எவற்றிலும் மஹிந்தகலந்துகொள்ளவில்லை. இருந்தபோதிலும், அவர் சுதந்திரக் கட்சி அடிமட்டத் தொண்டர்களை அடிக்கடி சந்தித்து வந்ததுடன், கட்சிக்குள் தனது அதிகாரத்தை மீண்டும் செலுத்துவதற்குப் பின்னணியிலிருந்து செயற்பட்டார்.
அதற்காக சில உறுப்பினர்களை அவர் உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார். எனினும், கட்சியில் சந்திரிகா மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்றமையால் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அதன் ஒருகட்டமாகவே அண்மையில் குருநாகலையில் சந்திரிகாவுக்கு "ஹு' சத்தம் போட்டிருந்தனர். ""இதற்குப் பின்னணியில் மஹிந்த, தயாசிறி இருப்பதுடன் இதனை இணையம் மூலம் பிரபல்யப்படுத்தியது நாமல் ராஜபக்சவே'' என சந்திரிகா வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னர் கட்சிக்குள் மஹிந்தவுக்கிருந்த ஆதரவாளர்கள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த பலர் தற்போது பின்னடித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளைஇவர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தியுள்ளளர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.