ஒபாமாவும் இலங்கை வருவதற்கு வாய்ப்பு
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்கைக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கூட, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக, வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, “அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கூடிய விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக, வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது.
மேலதிகமாக, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூட சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மட்டுமல்ல.
அரசியலமைப்பு மாற்றங்களுடன் ஜனநாயகம் திரும்பியமை, நல்லாட்சி, திட்டமிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆகியன, அமெரிக்க உயர் பிரமுகர்களின் இலங்கைக்கான பயணங்களை ஊக்குவிப்பதில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.