Breaking News

மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் வெடிக்காத நிலையில் ஷெல்!

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த வாரம் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் வெடிக்காத நிலையில் நிலத்தின் கீழ புதையுண்ட நிலையில் உள்ள ஷெல் ஒன்று இன்று வியாழக்கிழமை பொதுமக்களினால் கண்டுபிடிக்கப்பட்டது. 

பொது மக்கள் இந்தப் பகுதியில் தமது காணிகளை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இத்தகைய வெடிக்காத ஷெல் காணப்பட்டமை பொது மக்கள் மத்தியில் சற்று அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பொது மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீளவந்து குடியேறவேண்டும் என்ற ஆர்வத்துடன் காணப்படுவதால் இதனைப் பெரிதுபடுத்தாது கிராமஅலுவலருக்கு அறிவித்துவிட்டு தொடர்ந்தும் தமது காணிகளை துப்புரவு செய்யும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

 இதேவேளை - வறுத்தலைவிளான் ஊடாக சாந்தை சந்திக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள சிறிய வைரவர் கோயில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக எந்த வகையான பராமரிப்பும் இன்றி கைவிடப்பட்ட நிலையில கட்டடம் அழிந்து வெறும் சூலம் மட்டும் இறுதியில் காணப்பட்டது. 

நேற்று வரை இதே நிலையிலேயே வைரவர் சூலம் காணப்பட்டது இன்று வியாழக்கிழமை குறிப்பிட்ட பகுதியில் உள்ள காணிகளை நேற்று புதன்கிழமை துப்புரவு செய்ய வந்த மக்கள் வைரவரின் நிலைமையை கண்டு அப்பகுதியைத் துப்புரவு செய்து விளக்குவைத்து பூவைத்து தமது குல தெய்வமான வைரவரை வழிபடத் தொடங்கியுள்ளார்கள்.