மீண்டும் அரசியலுக்கு திரும்பும் எண்ணம் கிடையாது - பசில்
மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்ச, முன்னைய ஆட்சிக்காலத்தில் பெரியளவிலான ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த சில நாட்களிலேயே, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார் பசில் ராஜபக்ச.
இந்த நிலையில், திவிநெகும கணக்கில் இருந்த 6500 மில்லியன் ரூபா பணத்தை, பசில் ராஜபக்ச தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகவும், அதில் பெருமளவு ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும், பசில் ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், பசில் ராஜபக்சவைக் கைது செய்ய கடுவெல நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மதித்து, வரும் 21ஆம் நாள் நாடு திரும்பவுள்ளதாக பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார். எனினும், நாடு திரும்பினாலும் அரசியலில் மீண்டும் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.