Breaking News

கூட்டமைப்பு பதிவு செய்யப்படாது! புரிந்துணர்வு உடன்படிக்கை மட்டுமே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பிலான கலந்துரையாடல் 17ஆம், 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில், இந்தக் கூட்டம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய முடியாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டு கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் எதிர்காலத்தில் செயற்படுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக 17 ஆம், 18 ஆம் திகதிகளில் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கூடிப் பேச்சுவார்த்தை நடத்துவதெனவும் இந்தப் பேச்சுவார்த்தை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதாகவும் சற்று சுகவீனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 19 ஆம் திகதி மாவை சேனாதிராஜா நாடு திரும்பியதும் கூட்டம் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டு யாழ்ப்பாணம் அல்லது கொழும்பில் நடைபெறும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.