நிதிப் பிரேரணை தோல்வி! அரசாங்கம் உடன் பதவி விலக வேண்டும் - தினேஷ் கோரிக்கை
அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட நிதி சார்ந்த பிரேரணை தோற்க டிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
திறைசேரி உண்டியல் தொடர்பான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விசேட ஊடக மாநாட்டில் கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். இந்த ஊடக மாநாட்டில் வாசுதேவ நாணயக்கார, கீதாஞ்சன குணவர்தன, சரத் குணவர்தன, வை.ஜீ.பத்மசிறி, ஜனக பண்டார, மனுஷ நாணயக்கார, ஸ்ரீயாணி விஜேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர்.
400 பில்லியன் ரூபா கடன் பெறும் பிரேரணையை பாராளுமன்றம் நிராகரித்துள்ளது. நிதி தொடர்பான பிரேரணை தோற்றால் அரசாங்கம் பதவி விலக வேண்டும். நிதி அமைச்சர் கூட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. பல ஐ.தே.க. உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை. இந்த நிலையில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 32 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் கிடைத்தமையால் பிரேரணை தோல்வியில் முடிவடைந்தது.
“ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே இதனை தோற்கடித்துள்ளனர். இது ஐ.ம.சு.மு. கொள்கைக்கு முரணானது எதிர்க்கட்சி தந்திரோபாயமாக இந்த முடிவை எடுத்தது ஐ.ம.சு.மு. பாராளுமன்ற குழு கூடி இந்தப் பிரேரணை குறித்து முடிவு செய்யாததால் எமது எம்.பிகள் விரும்பியபடி வாக்களித்தனர்” எனவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.