Breaking News

எக்னலிகொட தொடர்பான விசாரணை திருப்திகரமானதாக இல்லை: குற்றஞ்சாட்டும் மனைவி

காணாமல் போன தனது கணவர் தொடர்பான புதிய அரசாங்கத்தின் விசாரணைகள் தொடர்பாக தன்னால் திருப்தியடைய முடியாதென ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்யா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

அவர் காணாமல் போனமை தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு ஒப்படைக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்த போதும் அது என்ன நிலைமையில் இருக்கின்றது என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் தனக்கு அறியத்தரவில்லை எனவும் சந்யா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த வருடத்திற்குள் தனது கணவருக்கு என்ன நடந்தது என்பது தெரிய வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இணையத்தளம் ஒன்றில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணியாற்றிய பிரகீத், கொழும்பில் வைத்து நான்கு வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். இருந்தபோதிலும், அவர் குறித்த எந்தவிதமான தகவல்களும் வெளிவரவில்லை.