மயூரனின் இறுதி விருப்பங்கள்! (காணொளி இணைப்பு)
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் சில மணித்தியாலங்களில் மரண தண்டனைக்குள்ளாகப் போகிறான்.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோர் இந்தோனேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டாயிற்று.
இன்று இரவு இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக மயூரனின் குடும்பத்தாருக்கு இந்தோனேசிய அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இறுதிவிடை கொடுக்கும் சந்தர்ப்பத்தினை அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களிற்கும் இந்தோனேசிய அரசு வழங்கியுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் வேறாக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர் சிறைக்கு வெளியே காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும். தன் வாழ்வின் முற்றுப்புள்ளி இன்று எனத் தெரிந்தும் மயூரனின் இறுதி விருப்பங்களைக் கேட்கையில் கலங்காத கண்களும் குளமாகும்.
எவ்வித சலனமும் இல்லை மயூரனின் கண்களில். தூரிகையினால் துளையிடும் இதயத்தினை வரைந்து நாழிகைகளை நகர்த்தி அமைதி தேடும் இவன் கரங்கள். அந்தக் கரங்கள் அவன் விழிநீரை துடைத்து துடைத்து தோல்வி கண்டதாலோ என்னவோ இன்று ஓவியம் தீட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது.
மயூரன் சுகுமாரன் தனது இறுதி மணித்தியாலங்களை ஓவியம் தீட்டுவதில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார். மயூரன் தனக்கு பாய்ச்சப்படும் குண்டுகளை செலுத்தும் ஆயுததாரியை நேரடியாக பார்த்துக் கொண்டே மரணத்தை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று மரணதண்டனை எதிர்கொள்ளும் மயூரன் சுகுமாரன் உட்பட ஏழு பேர் குறித்து மனித உரிமை வழக்கறிஞர் ஜியோபிரி ராபர்ட்சன், சிட்னி மார்ட்டின் பிளேஸ் ஊர்வலத்தில் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசியா அரசாங்கம் விதிக்கும் மரண தண்டனையானது, உயிர்களையும் நாட்டு சட்டத்திட்டங்களையும் அவமதிப்பது போல் காணப்படுவதாக குறித்த மனித உரிமை வழக்கறிஞர் ஜியோபிரி ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.