கொழும்பில் முளைக்கும் சீனாவின் இலத்திரனியல் கண்காணிப்புக் கோபுரம்
கொழும்பில் தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதன் மூலம் சீனா தனது ‘கொலையாளியின் தண்டாயுதம்’ என அழைக்கப்படும் கனரக ஆயுதங்களை மறைத்து வைத்து கண்காணிப்பில் ஈடுபட முடியும். இக்கோபுரம் அமைக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டால் இந்திய மாக்கடலினதும் தென்னாசியாவினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.
இவ்வாறு southasiaanalysis.org ஊடகத்தில், பாஸ்கர் ரோய் என்ற மூலோபாய ஆய்வாளர் எழுதியுள்ள கட்டுரையில் எச்சரித்துள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்ட போது, இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன முதலீடுகள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யக் கூடாது எனவும் சீன முதலீட்டைப் பாதுகாக்க வேண்டும் எனவும் சீனத் தலைவர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
சிறிசேனவைப் பொறுத்தளவில் இலங்கையின் மிக நெருக்கடியான நிதி நிலைமையை ஈடுகட்டுவதென்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகக் காணப்பட்டது. நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தேவையிருப்பதால், அதனை வழங்கியுதவுமாறு அனைத்துலக நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கோரியிருந்த போதும் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
சீனாவின் கடன் பிடிக்குள் இலங்கை அகப்பட்டுள்ளமை தெளிவானதாகும். இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு இலங்கை பயன்படுத்தப்படுகிறது. இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுள் கொழும்பில் அமைக்கப்படும் தாமரைக் கோபுரமும் ஒன்றாகும்.
இக்கோபுரத்தின் கட்டுமானத்திற்காக சீனாவின் எக்சிம் வங்கி நிதி வழங்கியுள்ளது. இது ஈபிள் கோபுரத்தை விட 26 மீற்றர் உயரமாக கட்டப்படுகிறது.
103 மில்லியன் டொலர் பெறுமதியான இக்கோபுரமானது சீனத் தேசிய இலத்திரனியல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டுத்தாபனத்தாலும் Chinese Aerospace Long – March International Trade என்ற பிறிதொரு நிறுவனத்தாலும் நிர்மாணிக்கப்படுகிறது.
இலங்கையின் முன்னர் ஆட்சி செய்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தால் இவ்விரு சீன நிறுவனங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. கொழும்பில் தாமரைக் கோபுர நிர்மாணத்தில் ஈடுபடும் சீன நிறுவனங்களுள் ஒன்றான இலத்திரனியல் நிறுவனமானது சீனப் பாதுகாப்பு இலத்திரனியல் முறைமை ஒருங்கணைப்பு, பாதுகாப்பு இலத்திரனியல் முறைமை நிர்மாணம், பொதுப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, அனைத்துலக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான இலத்திரனியற் பொருட்களை வழங்குதல் உட்பட பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.
இதேபோன்று சீனாவின் மற்றைய நிறுவனமான விண்வெளிச் செயற்பாட்டு மையமானது பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல், தொழினுட்ப சேவைகளில் ஈடுபடல், பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்தல், கலக எதிர்ப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்தல், தொழினுட்பங்கள் மற்றும் சேவைகள் போன்றன உட்பட பல்வேறு ஏற்றுமதி சார் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
இலங்கையில் தென்னாசியாவின் மிகப் பெரிய கோபுரத்தை அமைப்பதில் ஈடுபடும் இவ்விரு சீன நிறுவனங்களும் இந்திய மாக்கடல் மற்றும் இந்தியா ஆகியவற்றைக் கண்காணிப்பதையே தமது நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன.
இலங்கையில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரமானது சீனாவின் இலத்திரனியல் கண்காணிப்பு பொறிமுறையை உள்ளடக்கியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இவ்வாறான உயரமான கோபுரத்தை அமைப்பதன் மூலம் சீனா தனது மறைமுக நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற முடியும்.
இந்திய மாக்கடலில் சீனா தனது கண்காணிப்பை மேற்கொள்வதற்குத் தேவையான பொருத்தமான தொழினுட்பம் சிறிலங்காவில் தற்போது காணப்படவில்லை. ஆகவே கொழும்பில் தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதன் மூலம் சீனா தனது ‘கொலையாளியின் தண்டாயுதம்’ என அழைக்கப்படும் கனரக ஆயுதங்களை மறைத்து வைத்து கண்காணிப்பில் ஈடுபட முடியும்.
இக்கோபுரமானது முற்றுமுழுதாக அமைக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டால் அது இந்திய மாக்கடலினதும் தென்னாசியாவினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். சீனாவால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம், கொழும்புத் துறைமுகம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய மூன்று முக்கிய தந்திரோபாயத் திட்டங்கள் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலுக்குத் துணையாக அமையும்.
சீனாவின் 21ம் நூற்றாண்டுக்கான கரையோர பட்டுப்பாதைத் திட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு சீனாவானது இலங்கை போன்ற நாடுகளில் தனது முதலீட்டை மேற்கொள்ளும்.
பட்டுப்பாதைத் திட்டமானது அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்பதற்கான வர்த்தக மற்றும் அபிவிருத்தி முயற்சியாண்மையாக நோக்கப்படுகிறது. ஆனால் சீனாவானது இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அதனுடைய பட்டுப் பாதைத் திட்டத்தின் பிரத்தியேக வடிவமாக நோக்கப்படுகிறது.
இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய முத்தரப்பிற்கும் இடையில் பேச்சுக்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரிடமும் சீனா கூறியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி சீனாவில் தங்கியிருந்த போது சீனாவின் இந்த யோசனைக்கு தலையசைத்தது போல் தெரிகிறது. ஆனால் இதற்குள் இந்தியாவையும் கொண்டுவர வேண்டியுள்ளது. இலங்கையில் தன்னால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா அதிருப்தி அடைவதை சீனா நன்கறியும். ஏனெனில் இந்த நடவடிக்கைகளில் சில இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இந்தியா கருதுகிறது.
இவ்வாறானதொரு முத்தரப்பு உடன்படிக்கையில் இந்தியா எவ்வாறானதொரு பங்களிப்பை வழங்க வேண்டும் என சீனா விரும்புகிறது? இலங்கையில் சீனா கோபுரம் ஒன்றை அமைக்கும் போதும், தனது நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பில் தரித்து நிறுத்தும் போதும், இறுதியாக இலங்கை சிவில் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் போதும் இந்தியா இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என சீனா கருதுகிறதா?
இந்தியாவைத் தனது வலைக்குள் இழுப்பதற்காக சீனா, இலங்கையைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது. மே மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது உண்மையில் இந்த விடயம் தொடர்பாக மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.