லொரியஸ் விருது இரண்டாவது தடவையாக நொவெக் ஜெகோவிச் வசம்
விளையாட்டு வீரர்களின் அதி உன்னத கௌரவமான லொரியஸ் விருதை செர்பியாவின் நொவெக் ஜெகோவிச் இரண்டாவது தடவையாக வென்றுள்ளார்.
ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான லொரியஸ் விருது எத்தியோப்பிய மெய்வல்லுநரான டென்சிபே டிபாபாவுக்கு கிட்டியது. சர்வதேச மட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் லொரியஸ் வருடாந்த விருது வழங்கல் விழா சீனாவின் ஷாங்காய் நகரில் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது.
ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு டென்னிஸ் சாம்பியனான செர்பியாவின் நொவெக் ஜோகோவிச் தெரிவானார். என்றாலும், மொன்டிகார்லோ டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள அவரால் விருது விழாவில் பங்குபற்ற முடியவில்லை. இதனால் ஜெகோவிச்சின் விருது மொனாக்கோ இளவரசியான ஷலீனின் கரங்களால் மொன்டிகார்லோவில் பரிசளிக்கப்பட்டது.
கடந்த வருடம் கால்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்திய ஜேர்மனி அணி ஆண்டின் சிறந்த அணிக்கான விருதுக்கு பாத்திரமானது. போர்மியூலா வன் கார் பந்தய வீரரான அவுஸ்திரேலியாவின் டேனியல் ரிகாடோ ஆண்டின் வளர்ந்துவரும் வீரர் விருதை சுவீகரித்தார். டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஆசிய வீராங்கனை என்ற பெருமைக்குரிய சீனாவின் லீ நாவுக்கு விசேட விருது பரிசளிக்கப்பட்டது.