இலங்கையின் நல்லிணக்கம், புனர்வாழ்வு குறித்து பேசினேன் – அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், தாம், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கான பயணத்தின் முடிவில் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சென்னையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், அது பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
அவுஸ்ரேலியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து இலங்கை அகதிகள் படகுகள் மூலம் அடைக்கலம் தேடிச் செல்வதை தடுக்கும் முயற்சிகள் குறித்தே அவர் தனது தமிழ்நாட்டுப் பயணத்தின் போது அதிக கவனம் செலுத்தியிருந்தார். அவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து இது தொடர்பாக பேச்சு நடத்தினார்.
அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசாங்கம் சிறந்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்ட அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர், அதற்கு தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். “ஆபத்தான கடல்வழிப் பயணத்தை மக்கள் மேற்கொள்வதை தடுப்பதற்கு பாரிய முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். ஆட்களைக் கடத்துவதை ஒரு வர்த்தகமாக மேற்கொள்வதை தடுப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.