Breaking News

தேர்தல் முறை மாற்றம் குறித்து அதிரடியான இரண்டு யோசனைகள்

இலங்கையில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக  அரசாங்கம் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. புதிய தேர்தல் முறை தொடர்பாக எல்லா பிரதான அரசியல் கட்சிகளினதும் ஒப்புதலைப் பெறும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.

தேர்தல் முறை குறித்த இரண்டு யோசனைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த இரண்டு யோசனைகளையுமே ஐதேக ஏற்றுக் கொள்கிறது, முதலாவது யோசனையின்படி, நாடாளுமன்றத்துக்கு 125 ஆசனங்கள் நேரடியாக தொகுதிவாரியான முறையிலும், 75 ஆசனங்கள், மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும், 25 ஆசனங்கள், தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படும்.

மற்றொரு யோசனையின்படி, 150 ஆசனங்கள் தொகுதி வாரியாகவும், 75 அல்லது 65 ஆசனங்கள் மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும், 15 அல்லது 25 ஆசனங்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படும். ஏனைய கட்சிகளுடன் எட்டப்படும் இணக்கப்பாட்டுக்கு அமைய, இந்த இரண்டு யொசனைகளில் ஏதாவது ஒன்று நாடாளுமன்றத்தில் வரைவுப் பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்.

நாளை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தல் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.