ஆதரவாளர்களுடன் மகிந்த இன்று முக்கிய சந்திப்பு
தன்னைப் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு வலியுறுத்தி வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்பு மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான தங்காலையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில். 19வது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச எந்த அரசியல் கட்சியின் மூலம் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது என்பது குறித்தும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமக்கு பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்தால், பொதுஜன ஐக்கிய முன்னணி மூலம், தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.