Breaking News

அரசாங்கம் வீழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ஏன் சொன்னார்?

அரசாங்கம் வீழ்ச்சி அடைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர், தனது அரசாங்கம் வீழ்ச்சியடைகிறது எனக் கூறியதற்குள் அவரின் இயலாமை தெரிகிறதா? அல்லது தேசிய அரசாங்கம் என்பது ஒருபோதும் சாத்தியமற்றது என்பதைக் குறிக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.

கூடவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் போக்கு ஆளுமையற்றது என்பதைச் சொல்லாமல் சொல்வதற்காக அரசு கீழ் இறங்கிப் போகின்றது என்ற வார்த்தையை ஜனாதிபதி மைத்திரி பிரயோகித்தாரா? என்றெல்லாம் எண்ணத்தோன்றும்.

எதுவாயினும் மகிந்த ராஜபக்ச­ இருந்த கதிரையில் இன்னொருவர் இருப்பதாக இருந்தால், அவர் மகிந்தவைவிட மிகவும் வல்லமை பொருந்தியவராக, அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி மைத்திரியைப் பொறுத்தவரை அவர் ஒரு நல்ல மனிதராகவே இருக்க நினைக்கிறார்.

நல்ல மனிதர் என்பது வேறு. உத்தம வினைத்திறன் உடைய அரசாட்சி செய்வதென்பது வேறு. நல்ல மனிதராக இருக்கக் கூடிய ஒருவர் அரசாங்க நிர்வாகத்திலும் அரசுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பிலும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.  ஆனால் ஜனாதிபதி மைத்திரி தன்னை எதிர்த்தவர்களுக்கு - மகிந்த ராஜபக்­வுடன் கூட இருந்தவர்களுக்கு மந்திரிப்பதவி வழங்க நினைத்து அதனை நிறைவேற்றினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு நெருக்கமானவர்களை அமைச்சர்களாக ஆக்கினால், அவர்கள் நிச்சயம் தமது ஆதரவை மகிந்த ராஜபக்­வுக்கே வழங்குவர். அத்தகையதொரு சூழ்நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது என்றே கூறவேண்டும். மகிந்த ராஜபக்­வுக்கு ஆதரவானவர்களுக்கு அமைச்சுப்பதவி கொடுத்த சில நாட்களிலேயே அரசு வீழ்ச்சியடைகிறது என ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளதிலிருந்து நிலைமை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாமல்லவா? 

ஆக, ஜனாதிபதி மைத்திரி அடுத்துவரும் ஆண்டுகளுக்கு தன்னை பாதுகாப்பதாக இருந்தால், நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் கைவைக்காமல் இருப்பதே ஒரே வழியாகும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதில் பெரும் பங்காற்றியவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் தமிழ், முஸ்லிம் மக்களுமாவர்.


எனினும் ஜனாதிபதி மைத்திரியின் அரசைப் பலப்படுத்துவதற்குத் தேவையான அரசியல் சக்தி சந்திரிகாவிடமோ அல்லது தமிழ்-முஸ்லிம் மக்களிடமோ இல்லை.  அதேநேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி என்பதைத் தவிர; மைத்திரியைப்பலப்படுத்துதல், அரசாங்கத்தின் ஸ்திரத்தன் மையை உறுதிப்படுத்துதல் என்ற சிந்தனை அறவே இல்லாதவராக உள்ளார்.

இந் நிலையில் மகிந்தவின் ஆதரவாளர்கள் ஊடுருவியுள்ள அரசாங்கத்தை வழிப்படுத்திச் செல்வதென்பது ஜனாதிபதி மைத்திரிக்கு கடினமான காரியமாகவே இருக்கும். இதன் காரணமாகவே அரசாங்கம் வீழ்ச்சியடைகிறது என மனம் திறந்து மைத்திரி சொன்னார் என்று கருத இடம் உண்டு.

என்ன செய்வது ஆளும் கட்சி எது? எதிர்க்கட்சி எது? என்று இனங்காண முடியாமல், ஆளும் கட்சிக்குள் எதிர்க்கும் கட்சி; எதிர்க்கட்சிக்குள் ஆளும் கட்சி என்ற மிக மோசமான குழப்பம் இருப்பதால், நடப்பது நடக்கட்டும் என்ற துணிச்சலோடு பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தலை நடத்துவதைத் தவிர ஜனாதிபதி மைத்திரிக்கு வேறேதேனும் வழியிருப்பதாகத் தெரியவில்லை.