இலங்கையில் நடந்தது குற்றம் தண்டனை கொடுப்பது யார்?
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மேற்போந்த குற்றச்சாட்டு சாதாரணமானதன்று. உலகில் மிகப்பெரிய கொடூரமான ஆயுதம் பாலியல் வன்முறையாகும். போர் நடந்த நாடுகளில் இடம் பெற்ற பாலியல் வன்முறைகள் மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது உலகறிந்த உண்மை.
நிலைமை இதுவாக இருக்க, இலங்கை என்ற ஒரு நாட்டுக்குள் இனத்துவத்தின் பெயரால் தமிழ் இனம் கொன்றொழிக்கப்பட்டது மட்டுமன்றி தமிழர்கள் மீது பாலியல் வன்முறைக் கொடூரங்களும் கட்டவிழ்த்தப்பட்டன-கட்டவிழ்த்தப்படுகின்றன என்ற செய்தியை மனித சமூகம் ஒரு போதும் மன்னிக்க மாட்டாது.
அதேநேரம் தமிழர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைப் பிரயோகம் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. அதில் ஒன்று இலங்கை ஆட்சியாளர்கள்-பேரினவாதிகள் மிகக் கீழ்த்தரமான முறையில் தமிழ் மக்களை வஞ்சிக்கின்றனர் என்பது.மற்றையது இலங்கையில் தமிழ் மக்கள் மிக மோசமான கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்பது.
இந்த இரண்டு உண்மைகளையும் உலகம் அறிந்துள்ளதாயினும் குற்றச் செயலுக்கான தண்டனையை வழங்குவது யார் என்பதே இப்போதைய கேள்வி. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருகிறது. போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் மோசமான பாலியல் வன்முறைக் கொடுமைத்தனம் நீள்கிறது என்றால், இலங்கை ஆட்சியாளர்களுடன் தமிழர்கள் உடன்பட்டுப் போகக்கூடிய சூழ்நிலை உண்டா? என்பதை சர்வதேசமே தீர்மானிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்ற பிரதிநிதிகள் சிங்கள இனத்துடன் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும் என வலியுத்துகின்றன. ஒரு நாட்டுக்குள் இன ஒற்றுமை அவசியம் என் பதில் தமிழர்கள் முரண்பாடான கருத்தைக் கொண்டவர்கள் அல்ல. இருந்தும் ஐ.நா செயலாளரின் கருத்துப்படி இன்னமும் தமிழர்களுக்கு எதிரான பாலியல் வன்மங்கள் தொடர்கின்றன என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.
இந்த உண்மையை அம்பலப்படுத்தியவர் ஐ.நா சபையின் மிக உயர்ந்த பொறுப்பைக் கொண்டுள்ள அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன் என்பதற்குள்; பொய்யான தகவல்களோ, விசமத்தனமான பிரசாரங்களோ இருக்க முடியாது என்பது உறுதியாகின்றதல்லவா?
அப்படியானால், சிங்களப் பேரினவாதத்துடன் தமிழர்கள் ஒற்றுமைப்பட்டு வாழமுடியும் என்ற கருத்து எந்தளவு தூரம் பொருத்தமானது என்பதை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்தினுடையதாகும். அதேநேரம் இலங்கையில் தமிழர்கள் விடுத லைப் போராட்டத்தை முன்னெடுத்ததற்குள் இருக்கக்கூடிய நியாயப்பாடுகள் இப்போது உலகிற்குத் தெரிகிறது.
இந்த நியாயப்பாட்டை தமிழர்கள் முன்வைக்கவில்லை. மாறாக ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனே முன்வைத்துள்ளார். ஆக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற கொடுமைத்தனங்கள் ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டு ஐ.நா சபையின் செயலாளரால் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை அவை அனைத்தும் அறிக்கைகளாக கோவைகளில் உறங்குகின்றனவே தவிர, தமிழ் மக்களுக்கு ஏதேனும் விமோசனம் கிடைத்ததா? கொடூரமான குற்றச் செயல்கள் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டனரா? என்றால் எதுவுமே இல்லை என்பதாக முடிவு இருக்கிறது.
இலங்கையில் நடந்த கொடூரங்கள் குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டாலும் தண்டனை வழங்குவதற்கு ஆளில்லை என்றால், எல்லாமுமே புஷ்வாணமாகிவிடும். அவ்வளவுதான்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்