ஆந்திரா துப்பாக்கிச் சூடு! உயிர் தப்பியவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
ஆந்திர வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் தப்பி வந்த 2 பேரின் சாட்சியத்தைப் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்துள்ளது.
தமிழகத் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் மட்டும் தப்பி வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்தவற்றை பதிவு செய்துள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் நேற்று தன்னை சந்தித்த இரு சாட்சிகளிடமும் பேசிய பின்னர், அவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், சாட்சியம் அளித்தவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதியதால், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி தமிழக காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஏராளமானவர்களுக்குத் தொடர்பு இருப்பதால், வழக்கின் முக்கியத்துவம் கருதி ஆந்திர மாநில தலைமைச் செயலர் மற்றும் ஆந்திர காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
என்கவுன்டரில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையில் பங்குபெற்ற வனத்துறையினர்கள், காவல்துறையினர் அனைவரது விவரங்களையும் வரும் 22ம் திகதி அல்லது அதற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும், என்கவுன்டர் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.