வட, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்த நடவடிக்கை – அஜித் பெரேரா
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, டச்சு நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மீள்குடியமர்வு, உயர்பாதுகாப்பு வலயங்களை மீளாய்வு செய்தல், நிலங்களைப் பொதுமக்களிடம் ஒப்படைத்தல், நல்லிணக்கம், மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகிய நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
டச்சு நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு உறுப்பினரும், பாதுகாப்புக் குழுத் தலைவருமான லிபரன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன் ரென் பொரேக் தலைமையில், நடந்த கூட்டத்திலேயே இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில், டச்சு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள்,பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.