கூட்டமைப்பு இரண்டு விடயங்களில் இணக்கப்பாடு கண்டுள்ளது!
நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான முக்கி கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்த சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய செய்திக்குறிப்பு,
இன்று நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ஒரு யாப்பின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்க வேண்டும் என்றும், அதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆகவே அதனடிப்படையில் ஒரு யாப்பு தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அதாவது கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகளும் என்னென்ன அடிப்படையில் செயற்படுகின்றன என்பது பற்றியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக ஈ பி ஆர் எல் எவ் ,புளொட் ,ரெலோ போன்ற கட்சிகள் இணைந்து ஒரு யாப்பையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தமிழரசுக்கட்சிக்கு கொடுத்திருந்தன. ஆனாலும் தமிழரசுக்கட்சி தேர்தல் காலமாக இருந்ததனால் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
இருப்பினும் எதிர் வரும் 7ஆம் திகதி மீண்டும் கூடி யாப்பின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும், மேலதிகமாக எனனென்ன விடயங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரமுடியும் என கூறப்பட்டுள்ளது. ஆகவே எதிர்வரும் 7ஆம் திகதி சந்திப்பில் இது தொடரபான இறுதி முடிவு எட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த இரண்டு விடயங்களிலும் கூட்டமைப்பின் எல்லா கட்சிகளும் உடன்பாடு காணுமிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் ஈ பி ஆர் எல் எவ் கட்சியைந் சேர்ந்த சுரேஷ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கலாநிதி சர்வேஸ்வரன், துரைரட்ணம் ஆகியோரும் ரெலோவைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா, கென்றி மகேந்திரன், ஜெனா உள்ளிட்டோரும், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இரா சம்பந்தன்,மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரும் புளொட்டைச் சேரந்த ஆர் ஆர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.