இலங்கையின் பொருளாதாரத்தில் 7.4% வளர்ச்சி – மத்திய வங்கி
இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்தில் 7.4% வளர்ச்சியை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் 2014 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாத வளர்ச்சி 7.8% ஐ எட்டுமென மத்திய வங்கி ஏற்கனவே எதிர்வுகூறியிருந்தது.
சீரற்ற வானிலை நிலவியதால் விவசாயத்துறை நடவடிக்கைகள் பலவீனமடைந்தமையே, எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் நூற்றுக்கு 4.7% வளர்ச்சியை காட்டிய விவசாயத்துறை, 2014 ஆம் ஆண்டில் 0.3% வளர்ச்சியை காட்டியுள்ளது. கைத்தொழில் துறையில் 11.4% , சேவைகள் துறையில் 6.5% வளர்ச்சி காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும், 2013 ஆம் ஆண்டில் 7.2% ஆக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, 2014 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.