வலி.வடக்கில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடிய 20 பேர் கைது
வலி.வடக்கில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வீடுகளை உடைத்து இரும்புக்கம்பிகள் , கதவு ,யன்னல், அதன் நிலைகள் களவாடிய மற்றும் பயன் தரு மரங்களை தறித்த 20 பேரை காங்கேசதுறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 25 வருடகாலமாக மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசமாக வலி.வடக்கு பகுதியில் உள்ள 590 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 11ம் திகதி மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டது.அப் பகுதிகளுக்கு மக்களோடு மக்களாக செல்லும் திருடர் கூட்டம. அப்பகுதியில் உள்ள ஆட்கள் இல்லாத வீடுகளுக்குள் நுழைந்து வீட்டின் கதவுகள் , யன்னல்கள் , அதன் நிலைகள் என்பவற்றை பிடுங்குவதுடன் வீட்டு தூண்கள் , கேற் தூண்கள் மற்றும் வீட்டில் உள்ள கொங்கிறீட் பிளாட்களை உடைத்து அதனுள் இருக்கும் இரும்பு கம்பிகள் என்பவற்றையும் களவாடுகின்றனர் அத்துடன் அப்பகுதியில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாம் களில் இருந்து இரும்பு பொருட்களை களவாடி செல்கின்றனர்.
அதேவேளை அப்பகுதியில் உள்ள மா ,பலா ,தேக்கு போன்ற பயன் பயன் தரு மரங்கள் மற்றும் இப்பிலிப்பி மரங்களையும் விறகுக்காக களவாக தறித்து எடுத்து செல்கின்றனர்.இவை தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிறிமோகன் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோருக்கு மக்களால் தெரியப்படுத்தப்பட்டத்தை அடுத்து அவர்களால் காங்கேசன் துறை பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.அதையடுத்து இன்றைய தினம் காங்கேசதுறை பொலிசார் மாவிட்டபுரம் ஆலய முன்பாக இருந்து சாந்தை சந்தி வரையிலான வீதியில் ரோந்து நடவைக்கையில் ஈடுபட்டதுடன்,
வாகனங்களை மறித்தும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.அதன் போது களவுகளில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களது வாகனமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.இதேவேளை களவுகளில் ஈடுபட்டவர்களை தடுக்க முற்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிறிமோகன் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்து உள்ளார்கள்