Breaking News

இரண்டாக உடைகிறது சுதந்திரக்கட்சி! மஹிந்­தவின் 2ஆவது அர­சியல் பிர­வேசம் ஆரம்பம்

எதிர்வரும் மேதினத்துடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தெளிவாக பிளவுபடலாமென நம்பகரமாக தெரியவருகிறது. கொழும்பு ஹைட்பார்க்கில் சுதந்திரக்கட்சியினர் மேதினக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள நிலையில், சுதந்திரக்கட்சியில் உள்ள மகிந்த ஆதரவாளர்கள் கிருலப்பனையில் போட்டி மேதினத்தை நடத்துகிறார்கள். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கத்தினரும் போட்டி மேதினத்திலேயே பங்குபற்றுவதாக முடிவு செய்துள்ளனர்.

ஹைட்பார்க் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ள வேண்டுமென சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அநுரபிரிய தர்சன யாப்பா நேரில் சென்று கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அதற்கு மகிந்த சாதகமாக பதிலளிக்கவில்லையென தெரிகிறது. மாறாக, கிருலப்பனையில் நடக்கும் போட்டி மேதினத்திலேயே அவர் கலந்து கொள்ளவுள்ளார். சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்க சம்மேளனத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதுவரை இருவேறுதரப்பினராக வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்த சுதந்திரக்கட்சி, பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமது நிலைப்பாடுளை உறுதியாக அறிவிக்க வேண்டியேற்பட்டுள்ளதால், மேதின கூட்டத்தில் தெளிவாக கட்சி பிளவுபடலாமென நம்பகரமாக தெரிகிறது.

கட்சிஉடைவதை தடுக்க விரும்பும் சில முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர். கட்சிஉடைவதை தடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தச்சந்திப்பில் மைத்திரி மற்றும் சந்திரிகா ஆகியோர் கடுந்தொனியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் கட்சியைவிட்டே அகற்றப்படுவார்கள் என கூறியுள்ளனர்.

இதேவேளை, மைத்திரி நேற்று அதிரடி முடிவெடுத்து நான்கு மகிந்த விசுவாசிகளை மத்தியகுழுவிலிருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.