’19’ஐ நிறைவேற்ற நாடாளுமன்றதில் நேற்று முழுவதும் மைத்திரி நடத்திய போராட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முழுநாளும் நாடாளுமன்றத்திலேயே தங்கியிருந் தார்.
நேற்றுக்காலை 9.30 மணியளவிலேயே நாடாளுமன்றத்துக்கு வந்த அவர், 19வது திருத்தம் தொடர்பாக, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையில் நிலவிய முரண்பாடுகளை தீர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தினார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினரை மாறி மாறி சந்தித்து, இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் ஈடுபட்டிருந்தார்.
19வது திருத்தச்சட்டத்தில், ஆளும் கட்சியால் 63 திருத்தங்களும், எதிர்க்கட்சியால் 11 திருத்தங்களுமாக மொத்தம், 174 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அதிகமான திருத்தங்களை பேராசியரியர் ராஜீவி விஜேசிங்க முன்வைத்திருந்தார். அவர் 55 திருத்தங்களையும், ஜோன் செனிவிரத்ன 29 திருத்தங்களையும் முன்வைத்திருந்தனர்.
டக்ளஸ் தேவானந்தா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலா 8 திருத்தங்களையும், சஜின் வாஸ் குணவர்த்தன 7 திருத்தங்களையும், சிறியானி விஜேவிக்கிரம 2 திருத்தங்களையும், தினேஸ் குணவர்த்தன மற்றும் கீதாஞ்சன குணவர்த்தன ஆகியோர் தலா 1 திருத்தங்களையும் முன்வைத்திருந்தனர்.
இவற்றுள்ள அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் விவகாரத்திலும், அமைச்சர்களை நியமிக்கும் அதிபரின் அதிகாரம் தொடர்பான விவகாரத்திலுமே இழுபறி நிலை ஏற்பட்டது. அரசியலமைப்புச் சபை அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று அரசதரப்பு வாதிட்டது. ஆனால், அது முற்றிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேணடும் என்று எதிர்க்கட்சி கூறியது.
மாதுளுவாவே சோபித தேரர், பாக்கியசோதி சரவணமுத்து, சிராணி பண்டாரநாயக்க ஆகியோரை அரசியலமைப்பு சபை உறுப்பினர்களாக நியமிக்க அரசதரப்பு முனைவதாக, எதிர்க்கட்சி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், இறுதியில், மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினால், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 3 துறைசார் நிபுணர்களையும் கொண்டதாக அரசியலமைப்பு சபை விளங்கும் என்று தீர்வு காணப்பட்டது.
அடுத்து, அமைச்சர்கள் நியமனத்துக்கு பிரதமரின் அனுமதியை அதிபர் பெற வேண்டும் என்ற விதிமுறையையும் மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த இரண்டு முக்கிய திருத்தங்களும் செய்யப்படாமல் 19வது திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியை அடுத்து, அமைச்சர்கள் நியமனம் தொடர்பான பிரிவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, இணக்கம் காணப்பட்டது. இதையடுத்து வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
இருதரப்பு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் பகல் முழுதும் தீவிரமாக ஈடுபட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர், நாடாளுமன்றத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தனது பணியகத்தில் இருந்தவாறு வாக்கெடுப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். மூன்றாவது வாசிப்பு நிறைவேறிய பின்னரே அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தமது இல்லத்துக்குத் திரும்பினார்