19வது திருத்தத்தை எதிர்த்தால் தேர்தலில் போட்டியிட முடியாது - மைத்திரி எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதில், ஜனாதிபதியும், பிரதமரும் தீவிர அக்கறை காண்பித்து வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக இருந்தாலும், அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன் அதனைத் தோற்கடிக்கவும் கங்கணம் கட்டியுள்ளனர். இந்தநிலையில், தனது கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்புகளைச் சமாளிக்கவும், 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார்.
இதன்படி, 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிரானவர்கள் அடங்கிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.19வது திருத்தச்சட்டம் வரும் 20ம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.