19ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமா?
19ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆளும் கட்சியினர் எதிர்வரும் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் 19ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க தீர்மானித்திருந்தனர். இது தொடர்பில் நேற்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் சமால் ராஜபக்ஸ தலைமயில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
19ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை எனவும், 19ம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படுவதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், எதிர்வரும் 20ம் திகதி காலை 19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் மீண்டும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது.
இந்த சந்திப்பின் போது 19ம் திருத்தச் சட்டம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க்பபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 19ம் திருத்தச்சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு புறம்பான வகையில் ஆளும் கட்சி கட்சித் தலைவர்களுக்கு 12 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாக மஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முரண்பாட்டு நிலைமையில் 19ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20ம் திபதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.