மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 10 பேருக்கு ஆயுள் தண்டனை
பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக பாடுபட்டு வரும் சிறுமி மலாலா யூசுப்சாயை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 10 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மிங்கோரா நகரில் உள்ள பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்புகையில், மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் அவர் படுகாயமடைந்தார். தலையிலும், வயிற்றிலும் குண்டு பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலாலா தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது. பின்னர், இவ்வழக்கில் அந்த அமைப்பை சேர்ந்த 10 பேரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்தனர்.அவர்கள் மீதான வழக்கு ஸ்வாட் நகரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இந்த வழக்கில் இன்று (30) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது மலாலா மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுலைமான், இர்பான், சவுகத், உமர், இக்ரமுல்லா, அட்னன், ஜாபர் இக்பால், இஸ்ரருர் ரெஹ்மான், இசார் மற்றும் ஜாபர் அலி ஆகிய அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் குழந்கைளின் கல்வி உரிமைக்காக போராடும் மலாலாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.