தராகி சிவராமின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் ,காணொளி இணைப்பு)
மட்டக்களப்பைச் சேர்ந்த மறைந்த மாமனிதர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவாரமின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
ஊடக துறையில் சேவையாற்றி உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் உயிர் நீத்த அனைவருக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் ஊடகவியலாளர் சிவராமின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களால் நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டது.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையோரால் சிவராமின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அருள் சஞ்ஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜ், மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.கனீபா, மட்டக்களப்பு கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் உட்பட பலர் நினைவுப் பேருரைகளை ஆற்றினார்கள்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, எஸ்.இராஜேஸ்பரன், ஊடக சுதந்திர இயக்க அமைப்பாளர் சுனில் ஐயசேகர, மற்றும் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.