நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும்
நேபாளத்தில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரக்கூடும் என்று அந்த நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா அச்சம் தெரிவித்தார்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகின. அங்கு மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரலாம். தொலைவிட கிராமங்களில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ' என்றார்.
மீட்புப் பணியில் தொய்வு: முன்னதாக, காத்மாண்டில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் சுஷீல் கொய்ராலா பேசியதாவது:
நிபுணர்கள், நிவாரணப் பொருள்கள் பற்றாக்குறையால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும், நிலநடுக்கத்தால் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிப்பவர்களுக்கு தாற்காலிக முகாம்கள் அமைக்கவும், அவர்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேரழிவிலிருந்து மீள, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று சுஷீல் கொய்ராலா வலியுறுத்தினார்.
கிராமங்களில் மீட்புப் பணி:நேபாளத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொலைவிட கிராமங்கள் நிலநடுக்கத்தால் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதாலும் அந்தப் பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது என்று கோர்க்கா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
மருந்துகள் பற்றாக்குறை:நேபாள தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மினேந்திர ரிஜால் கூறுகையில், "காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிவாரணப் பணிகளுக்கு மருத்துவ நிபுணர்களுடன், மருந்துப் பொருள்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றன' என்றார்.
இந்தியத் தூதர் சந்திப்பு: இதனிடையே, நேபாளத்துக்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ராய், நேபாள பிரதமர் சுஷீல் கொய்ராலாவை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, நேபாளத்துக்கு இந்தியா ஆற்றிவரும் உதவிகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்ளவதாக சுஷீல் கொய்ராலா, ரஞ்சித் ராயிடம் கூறினார்.
அமெரிக்கா ரூ.54 கோடி கூடுதல் நிதியுதவிநேபாளத்துக்கு, அமெரிக்கா ஏற்கெனவே 10 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி) நிதியுதவி அளித்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக, 90 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 கோடி) கூடுதல் நிதியுதவி அளிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
80 லட்சம் பேர் பாதிப்பு நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மொத்தம் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குடிநீர், உணவு, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் தவித்து வருவதாகவும் ஐ.நா.அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் கோர்க்கா படை பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நேபாளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட, எங்களது ராணுவத்தைச் சேர்ந்த ஏராளமான கோர்க்கா படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை நேபாளம் புறப்பட்டனர்.
அவர்களுடன் சூரியவிசை விளக்குகள், தாற்காலிக முகாம்கள் அமைக்கத் தேவைப்படும் பொருள்கள் உள்ளிட்டவையும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன' என்றார்.
இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டுநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளுக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா கூறியதாவது: அண்மைக் காலமாக, ஒரு சர்வதேச தலைமைத்துவத்தை இந்தியா வெளிப்படுத்தி வருகிறது. முதலில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட யேமனில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்தியா, தற்போது நேபாளத்திலும் சிறந்த பணியை ஆற்றி வருகிறது.
இந்தப் பணிகள் அமெரிக்காவை ஈர்த்துள்ளதுடன், எங்களுக்கு ஊக்கமாகவும் அமைந்துள்ளன. இதற்காக இந்தியாவைப் பாராட்டுகிறோம். அமெரிக்காவின் ஒத்துழைப்பு காரணமாக, சி-17எஸ், சி-130எஸ் ஆகிய ரக ஹெலிகாப்டர்களை இந்தியா தற்போது மீட்புப் பணிகளில் பயன்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இரு நாடுகளும் மேலும் நன்கு இணைந்து செயல்படும் என்றார் அவர்.