கோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா?
முகாமொன்றில் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டு அந்த முகாமுக்கு கோத்தா முகாம் எனப் பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த19 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது தெரிவித்த தகவலானது நாட்டிலும் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கின்ற காலங்களிலெல்லாம் இவ்வாறான பரபரப்பான தகவல்களும் அதிர்ச்சி தரும் செய்திகளும் வெளிவருவது இலங்கையரசாங்கத்துக்கு பாரிய சவால்களை உண்டு பண்ணியிருக்கிறது என்பது கடந்த கால அனுபவங்களைக் கொண்டு அறிய முடியும்.
2012 ஆம் ஆண்டு ஒக்டோபரில் மனித உரிமை மாநாடு நடைபெற்ற வேளையில் (மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வுக்கூட்டத் தொடர்) 31.10.2012 இல் நடைபெற்ற வேளையில் அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் 100 பேருக்கு மேற்பட்டோரும் 50 க்கு மேற்பட்ட அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்த வேளையில் மன்னாரிலிருந்து மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் தொலைத்தொடர்பு மூலம் (ஸ்கைப்) தெரிவித்த கருத்தும் தகவலும் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் உலகத்தையே ஜெனிவாப் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனோர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர். இந்த காணாமல் போன தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு இதுவரை பொறுப்புக் கூறவில்லை. சரணடைந்த போராளிகள் மீள்குடியேற்றம் மனித உரிமை மீறல்கள் காணிப் பறிப்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மீது அவர் சுமத்தியது இலங்கையரசுக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கியிருந்தது.
அது மட்டுமன்றி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மீது இக்காலப் பகுதியில் கொண்டு வரப்பட்ட குற்றப் பிரேரணை இலங்கையரசாங்கத்துக்கு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. இது போன்றதொரு இன்னுமொரு நெருக்கடியை இலங்கையரசாங்கம் சந்தித்த ஆண்டாக கருதப்படுவது 2013 ஆம் ஆண்டாகும். மனித உரிமை மாநாடு ஜெனிவாவில் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் சனல் 4 இனால் வெளியிடப்பட்ட விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இசைப்பிரியாவின் காணொளிக் காட்சி உலகத்தையே உலுக்கியது.
இக்காணொளியைப் பார்த்த பெண்ணிய அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் சினம் கொண்டு கர்ச்சித்தன. கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற (3.3.2014 –- 28.3.2014) ஜெனிவா மனித உரிமை மாநாட்டின் போது இலங்கையின் நன்மதிப்பை கெடுக்கும் இரு சம்பவங்கள் பதியப்பட்டன. இது நேரடியாகவே இலங்கையின் மனித உரிமை மீறல் பற்றிய சுட்டிக்காட்டலாக அமைந்தது. அதில் ஒன்றுதான் சனல் 4 இனால் வெளியிடப்பட்ட கொலைக்களம் என்னும் ஆவணப்படம்.
மற்றது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஜெனிவா மனித உரிமையாணையாளரிடம் கையளிக்கப்பட்ட 160 பக்கம் கொண்ட அறிக்கை. இந்த அறிக்கையில் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டு இலங்கையிலுள்ள இனவாத அமைப்புக்களாலும் ஒரு சில பௌத்த குருமார்களினாலும் பள்ளிவாசல்களுக்கும் மதப் பண்பாடுகளுக்கும் இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையாக அது இருந்ததாகக் கூறப்பட்டது.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலி அமைப்பின் தலைவரின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை சம்பந்தமான விவரணப் படம் போன்றவை கடந்த வருடம் ஜெனிவாவின் அக்கினி சாட்சியங்களாக இருந்த நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் திருகோணமலை கோத்தா முகாம் சம்பந்தமான அறிக்கை அதிர வைக்கும் தகவலாக வெளிவந்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாயவின் பெயருடன் திருகோணமலையில் கடற்படை முகாமில் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் 35 க்கு மேற்பட்ட குடும்பங்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாடு எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற வேளையில் இப்பரபரப்பு ஊட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கையின் இனக்கலவரம் வெடித்ததாக கூறப்படும் 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு வரையுள்ள சுமார் 30 வருட கால வரலாற்று அடையாளங்களில் திருகோணமலைப் பிரதேசமானது ஒரு கொலைக்களமாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இந்த முப்பது வருட கால பதிவுகள் சாட்சியங்களாக நிற்கின்றன.
திருகோணமலையில் 1983 ஆம் ஆண்டுக்குப் பின் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதற்கு அவ்வவ் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களே சாட்சியங்களாக அமைந்து காணப்படுகின்றன.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி யாழ். திருநெல்வேலியில் வைக்கப்பட்ட கண்ணிவெடி காரணமாக 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக கொழும்பு திருகோணமலை வாழ் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். திருகோணமலையில் ஏராளமான கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. திருகோணமலை சிவன் ஆலயத்தின் தேர் எரித்து நாசம் செய்யப்பட்டது. ஆலயத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலைக்கு குண்டு மழை பொழியப்பட்டது.
இச் சம்பவம் நடைபெறுவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன் (20.04. 1983) கிளிவெட்டியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி நவரத்தினராசா என்பவர் கிளிவெட்டியிலிருந்து கைது செய்யப்பட்டு குருநகர் முகாமில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த தொடக்கத்தினைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறின. வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலான உயிர்களை முதல் முதல் பறிகொடுத்த கிராமமாக மூதூர் கிளிவெட்டிக் கிராமம் என்பதை அப்போதைய புள்ளி விபரப் பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
1986 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கிளிவெட்டிக் கிராமத்தை அண்டியுள்ள கிராமமான தெஹிவத்தை கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கிளிவெட்டிக் கிராமத்துக்கு வந்த வேளை இவர்களும் இவர்களுடன் வந்த இன்னும் சிலரும் தாக்கப்பட்டதன் எதிரொலியாக இரு பெண்கள் உட்பட 36 பேர் கிளிவெட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பதைபதைக்கக் கொல்லப்பட்டார்கள்.
இதன் அடுத்த கட்ட திரை அரங்கேற்ற காட்சியாக 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி மல்லிகைத்தீவு பாரதிபுரம் பெரிய வெளிமணற்சேனை மேன்காமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 44 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அன்றைய தினம் காலை (16.7.1986) மல்லிகைத்தீவு சந்தியில் கண்ணி வெடியில் இராணுவம் கொல்லப்பட்டதை பழி தீர்க்கும் முகமாக பெரியவெளி பாடசாலையில் முகாமிட்டு தங்கியிருந்த அப்பாவி பொதுமக்கள் 44 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் இரு குழந்தைகள் கூட துப்பாக்கி ரவைக்குப் பலியாகினர். பால்மணம் மாறாத சிறுமிக்கு முன்னால் அவளின்தாய் உட்பட்ட இரு பெண்கள் பாலியல் வன்மத்துக்கு ஆளாக்கப்பட்டு 7 ஆண்களும் இரு பெண்களும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உப்புவெளிச் சந்தியில் நடைபெற்றது. திருகோணமலை நகரத்திலிருந்து நிலாவெளிக்கு செல்லும் பிரதான பாதையை இணைக்கும் 3 ஆம் கட்டைச் சந்தியில் அந்தப் பயங்கரப் படுகொலை நடந்தது.
குறித்த அன்றைய தினம் 11 பேர் கைது செய்யப்பட்டு 3 ஆம் கட்டை சந்தியிலுள்ள ஆட்கள் இல்லாத வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் அங்குள்ள மலசலகூட புதைகுழிகளில் முகம் தெரியாத வண்ணம் அசிட் ஊற்றி புதைக்கப்பட்டிருந்தனர். பத்து பேர் படுகொலை செய்யப்பட்ட போதும் ஒருவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை.
1985 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி குச்சவெளி பிரதேச பிரிவுக்கு உட்பட பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதன் எதிர்விளைவாக திரியாய் கிராமத்தில் குடியிருந்த தமிழ் மக்களின் 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. (05.06.1985) இக்கொடூரத்தின் காரணமாக அகதிகள் ஆக்கப்பட்ட சுமார் 3000 க்கும் மேற்பட்ட திரியாய்க்கிராம மக்கள் திரியாய் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
10.8.1985 ஆம் நாள் முகாமிலிருந்த 8 பேர் பஸ் ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்டு திரியாய் கிராமத்திலிருந்து ஹோமரங்கடவல என்னும் கிராமத்துக்கு செல்லும் இடைக்கிராமமான கல்லம்பத்தை என்ற கிராமத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர். அன்றைய தினம் காலையிலேயே கல்லம்பத்தை கிராமவாசிகளான நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். இது திரியாய் படுகொலையென பதிவு செய்யப்பட்டது.
2000 ஆம் ஆண்டுக்குப் பின் போர் உக்கிரமடைந்த நிலையில் திருகோணமலையில் மனித உரிமை மீறல்கள் உக்கிரம் பெற்றுக்காணப்பட்டது என்பதற்கு இக் காலத்தில் நடைபெற்ற படுகொலைகள் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் என்ற பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற மாணவர் படுகொலைச் சம்பவமானது திருகோணமலையை மாத்திரமன்றி உலகத்தையே கதிகலங்க வைத்த சம்பவமாக இருந்தது.
2006.01.2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து 5 மாணவர்கள் துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். தங்கத்துரை சிவானந்தா, ச. சஜேந்திரன், மனோகரன் ரஜீகர், லோ. ரொகாந்த், போ. ஹேமச்சந்திரன் ஆகிய ஐவர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களின் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்த படுகொலை உட்பட்ட ஏனைய மோசமான மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை கூட வெளிப்படுத்தப்படவில்லையென தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா. சம்பந்தன் 2013 பெப்ரவரி 27 ஆம் திகதி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் குழு அறை 14ல் உரையாற்றிய போது எடுத்துக் காட்டியிருந்தார்.
இது போல் முன்னாள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அதிரடிப்படையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் (2013 ஆம் ஆண்டு) ஆஜர்படுத்தப்பட்டனர். ஏழு வருடங்களுக்குப்பின்னே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த மாணவர்களின் படுகொலையின் பின்னணியாளர் யார் என்பது உலகறிந்த விடயமாகும்.
இதேயாண்டு (2006 ) இன்னுமொரு கோரமான மனித உரிமை மீறல் சம்பவம் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றது. அது தான் தொண்டர் நிறுவனப் பணியாளரின் படுகொலையாகும். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் தேசத்தின் தொண்டர் நிறுவனமான அக் ஷன் பாம் நிறுவனத்தில் கடமையாற்றிய 17 தொண்டர்கள் மூதூரில் வைத்து கொல்லப்பட்டார்கள். நான்கு பெண்களும் 13 ஆண்களும் பலியாக்கப்பட்டார்கள்.
மாவிலாறு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு தொண்டாற்ற வந்த மேற்படி தொண்டர்களே அலுவலகத்துக்கு வெளியே கொண்டுவரப்பட்டு குப்புற படுக்க வைத்து பின்பக்கமாக தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். 2006 ஆம் ஆண்டு ஒரு அபத்தமான ஆண்டு என வர்ணிக்கப்படுகிற அளவுக்கு இன்னும் பல சம்பவங்கள் திருகோணமலையில் நடந்ததை பல்வேறு சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆலங்கேணியென்னும் தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான காந்தன் சித்திரா (40 ) குடும்பப் பெண் 2.7.2006 ஆம் ஆண்டு இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்ற மறுநாள் 3.7.2006 இல் அனுராதபுர சந்தியில் வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த கிளைமோர் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர்.
14 பேர் படுகாயம் அடைந்தனர். 07.07.2006 கணேஷ் லேனில் முஸ்லிம் மீனவரும் 23.05. 2006 கனகசபை சந்திரன் என்ற மீன்வியாபாரியும் கட்டைப்பறிச்சான் சோதனைச் சாவடியிலும் 23.07.2006 இல் ஈச்சிலம்பற்று பூநகர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜா சுந்தரலிங்கம் (24) 20.08. 2006 ஆம் திகதி சொர்ணம் என்பவரின் சகோதரர் மக்ஹேய்சர் ஸ்ரேடியத்துக்கு அருகில் 14.09.2006 இல் அரச ஊழியர் ஒருவர் 2006.11.07இல் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் செல்வநாயகபுரம் கொலை, ஆத்திமோட்டைக் கொலையென இவ்வாண்டில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்திருந்தன. இவற்றுக்கு மேலாக உவர்மலை லோவர் வீதியில் வைத்து சுடரொளிப் பத்திரிகையின் திருகோணமலை நிருபர் எஸ். சுகிர்தராஜன் (வயது 35) ஆயுததாரிகளால் (24.01.2006) சுட்டுக்கொல்லப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு திருகோணமலையின் இத்தகைய போக்குகள் இன்னும் மலிந்து காணப்பட்டன. 2007.01.26 ஆம் திகதி கிண்ணியா நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆலங்கேணியைச் சேர்ந்த தங்கராஜா இதயராஜா (வயது 39) ஆயுத தாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 5.1.2007 இல் கிளேமோர் தாக்குதல் காரணமாக காயமடைந்ததன் எதிர்த்தாக்கமாக உப்புவெளிப் பிரதேசத்தில் ஜெயராசா ஜெயதீபன் அச்சுதன் சசிதரன் செல்வநாயகபுரம் நிரோசன் பற்றிக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
இவ்வாறு 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2009 ஆம் ஆண்டு காலம்வரை திருகோணமலைப் பிராந்தியத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களானது அப்பாவி பொது மக்களை பலி கொள்ள வைத்ததுடன் திருகோணமலை மாவட்டத்தின் அமைதிச் சமநிலையையும் இனச்சமநிலையையும் பாதித்த சம்பவங்களாகக் காணப்படுகிறது. இவை ஒரு புறமிருக்க இம்மாவட்டத்தில் விதவைகள் ஆக்கப்பட்டோர், காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் இடம்பெயர்ந்தோர் என்ற விவகாரங்கள் மனித உரிமை மீறல்களை உச்ச நிலைக்கு உயர்த்திக் காட்டுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் அல்லது தீர்வு காணப்படாத விடயமாகவே பேசப்படுகிறது.
முதலில் விதவைகள் என்ற பிரச்சினைகளை நோக்குவோமாயின் திருகோணமலை மாவட்டத்தில் 21 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள் ஜீவனோபாயமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் போரினால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் விதவைகள் இருப்பதாக உத்தியோகப்பற்றற்ற புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு மாவட்டத்தில் 26 விதவைகள் சங்கம் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மூதூரில் மாத்திரம் சுமார் 5 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விதவைகள் போரினால் கணவன்மாரை இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.
சம்பூர் மூதூர் பாலத்தடிச்சேனை கூனித்தீவு, கடற்கரைச் சேனை, சேனையூர், பச்சைநூல் கிளிவெட்டி, கங்குவேலி, மேன்காமம் ஈச்சிலம்பற்று வெருகல் இலங்கைத் துறைமுகம் போன்ற கிராமங்களில் இந்த விதவைகள் பரவலாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது சட்ட ரீதியாக பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்களின் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் எத்தனை ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளார்கள் என்ற முறையான கணக்கெடுப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லையென்றே கூற வேண்டும். இருந்த போதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்புக்கள் பூரணமாக்கப்படவில்லையென்ற வதந்திகளும் கூறப்படுகின்றன. ஒரு சில ஆய்வு மையங்கள் மேற்கொண்ட தகவலின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 3, 200 பேர் கடத்தப்பட்டும் காணாமலும் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தடியில் காணாமல் போ னோரை தேடியறியும் அமைப்பின் ஏற்பாட் டில் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட் டத் தில் தாய்மார் மனைவிமார் சகோதரர் உறவி னர் என்ற வகையில் பலநூறு பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட தாயொருத்தி 23 வருடங்களாக என் பிள்ளையைத் தேடுகிறேன் என்றும் ஒரு மூதா ட்டி தனது 3 பிள்ளைகள் கடத்தப்பட்டு காணா மல் போயுள்ளனர் என்றும் இன்னுமொரு தாய் தனது மகளின் படத்தை ஏந்திய வண்ணம் 2008 ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சைக்கு சென்ற எனது மகளை இதுவரை காணவில்லை என வும் கதறியழுத காட்சிகளைக் காண முடிந்தது.
கடந்த 3.2.2015 ஆம் திகதி கடத்தப் பட்டோர் காணாமல் போனோரை கண்டுபிடி த்து தரும்படி கோரி கவனயீர்ப்புப் போராட்ட மொன்று திருகோணமலை ஆளுநர் அலுவல கத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது. இதை நாங்கள் அமைப்பு மற்றும் கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு மாவட்ட பெண்கள் சமாஜம் அமரா அமைப்பு என்பன இணைந்து நடத்தியிருந்தன. ஏலவே பதியப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கடத்தப் பட்டோர் காணாமல் போனோர் விபரங்களும் புதிய தகவல்களும் சேர்க்கப்பட்டிருந்தன.
இவ் வகைத் தகவல்கள் எல்லாம் முறையான வகை யில் கோவைப்படுத்தப்பட்டு தரவு மயப்படுத் தப்பட வேண்டும். காணாமல் போய் உள்ளவர்கள் பற்றிய விசா ரணைகளை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு விரைவில் தனது அடுத்த அமர்வை திருகோணமலையில் நடத்தவுள்ளது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சுரேஷ் பிரே மச்சந்திரனால் தெரிவிக்கப்பட்ட கோத்தா முகாம் தொடக்கம் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட் டோர் மறைமுக முகாம்களில் தடுத்து வைக் கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வர அரசியல் தலைமைக ளும் சமூக அமைப்புக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.
- திருமலை நவம்-