Breaking News

‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்

புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) இன்று காலமானார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில்  காலமானார். கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

அக்காலப் பகுதியில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருத்து உயிரித்தியாகம் செய்த, ஈழிப் போராட்ட முன்னோடியான பொன் சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர்.

1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.

1953ம் ஆண்டு கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்ற இயற்பெயருடன் நெடுந்தீவில் பிறந்த இவர், பாடசாலைப் படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் 1972 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர்.

1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். அதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர்.

பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு வெளியீட்டில் கி.பி.

பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் எழுதியுள்ள கவிஞர் கி.பி அரவிந்தன் அவர்களின் கவிதைகளின் பிரெஞ்சு மொழித் தொகுப்பு, ‘Le messager de l’hiver’, [‘ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்’] என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பால்தமிழ் என்ற இணைய சஞ்சிகையை நடத்திய அவர், 2009ம் ஆண்டு புதினம் இணையத்தளம் நிறுத்தப்பட்ட பின்னர், புதினப்பலகை இணையத்தளத்தை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காறி கடைசி வரை அதற்காக உழைத்து வந்தார்.